பொள்ளாச்சி : ஆனைமலை ஒன்றியம், ஆத்துப்பொள்ளாச்சி, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றியம், ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு, ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்பகவுண்டன்புதுார், மணக்கடவு மக்கள், வந்து செல்கின்றனர்.அலுவலக கட்டடம் சேதமடைந்திருந்ததால், கடந்தாண்டு ஊராட்சியின் கிராம சேவை மைய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டப்படாததால், கிராம சேவை மையத்திலேயே, கிராம நிர்வாக அலுவலகமும் இயங்கி வருகிறது.
கிராம சேவை மையம் வசதி இல்லாததால், ஆதார் கார்டில் மாற்றம், ஆதார் எண்ணை மற்ற சேவைகளுடன் இணைத்தல் மற்றும் வருவாய்த்துறை சான்றுகள் பெற, ஆத்துப்பொள்ளாச்சி மக்கள், 3 கி.மீ., துாரம் பயணித்து காளியப்பகவுண்டன்புதுார், அல்லது, 5 கி.மீ., பயணித்து அம்பராம்பாளையம்செல்ல வேண்டியுள்ளது.இதனால், நேர விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படுவதாக, பொதுமக்கள் புலம்புகின்றனர். இந்த பிரச்னையை துறை அதிகாரிகள் கவனித்து, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு, புதிய கட்டடம் கட்டுவதுடன், கிராம சேவை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான், சான்றிதழ்கள் பெறுவதற்காக அலைமோதுவது தவிர்க்கப்படும், என, பொதுமக்கள் தெரிவித்தனர்.