கோவை : தீபாவளியை முன்னிட்டு, கோவையில் உள்ள ஜவுளிக்கடைகள், மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், நகைக்கடைகளில் விற்பனை களை கட்டியுள்ளது.
இந்தாண்டு தீபாவளி வரும், 24ல் கொண்டாடப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, மக்கள் மத்தியில் தீபாவளி கொண்டாட்டம் பெரிய அளவில் காணப்படவில்லை. இந்தாண்டில் நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. வர்த்தகம், தொழில் நிறுவனங்களில் இயல்பு நிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா அச்சம் நீங்கியுள்ள சூழலில், தொழில், வர்த்தக நிறுவனங்களில் இயல்பு நிலை வந்து விட்டதால், தீபாவளி கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது.
ஒரு வாரமாக கோவை கடை வீதிகளில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு பகுதிகளில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வருவோர் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.நெரிசலை கட்டுப்படுத்தவும், திருடர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும்,வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், கூடுதல் போலீசாரை பணியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் கூடுதலாக 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.