திண்டுக்கல்-நவராத்திரி விழாவின் 10ம் நாளான விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு கல்வியை மேம்படுத்தும் வகையில் கோயில்கள்,பள்ளிகளில் தானியங்களில் அ,ஆவன்னா என 'அகர' வரிசை எழுத கற்றுக்கெடுத்து அவர்கள் கல்வியில் ஞானம் பெற நடந்த வித்யாரம்பத்தில் குழந்தைகளுடன் பேற்றோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் கோயில்,ரயிலடிசித்தி விநாயகர் கோயில்,அபிராமி அம்மன் கோயில்,கோட்டை மாரியம்மன்கோயில்,மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள் கோயில்களில் பெற்றோர் தங்கள்குழந்தைகளை அழைத்து வந்து மஞ்சள் கலந்த பச்சரி,நெல்மணி உள்ளிட்ட தானியங்களை தட்டில் பரப்பி அதில் 'அ' எழுத வைத்து அவர்களின் கல்விஅறிவை துவக்கினர். பழநி: பழநி, சுற்று பகுதி ஆரம்ப பள்ளிகளில் வித்யாரம்பம் நடந்தது. குழந்தைகளுக்கு ஹிந்து முறைப்படி அரிசி நிரப்பிய தட்டில் 'ஓம்' எழுதி வித்யாரம்பம் செய்தனர்.பழநி நகர் 9வது வார்டில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு தற்காலிக அங்கன்வாடி மையத்தை கவுன்சிலர் புஷ்பலதா திறந்து வைத்தார். இதில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
வத்தலக்குண்டு:தேங்காய், பழ தட்டில் இனிப்பு புதிய சிலேட்டுடன் அங்கன்வாடிக்கு வந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அங்கு நடந்த வித்யாரம்பத்தில் நெல்மணிகளில் அ எழுதி பயிற்சி அளித்தனர். அங்கன்வாடி பணியாளர் சசிகலா ,உதவியாளர் லட்சுமி பெற்றோர், குழந்தைகளுக்கு பூ கொடுத்து வரவேற்றனர்.
சின்னாளபட்டி:சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா நடந்தது. முதல்வர் திலகம் தலைமை வகித்தார். தலைமையாசிரியை வெண்ணிலா முன்னிலை வகித்தார்.சிறப்பு பூஜைகளுடன் மாணவர் சேர்க்கைக்கான வித்யாரம்பம் நடந்தது. மாணவர்களுக்கு நெல்மணியில் அகர எழுத்து எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.