பெ.நா.பாளையம் : அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மா பூங்காவில், 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் பயனின்றி, மூடப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மா பூங்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், 5 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. அசோகபுரம் ஊராட்சி உட்பட்ட, 12 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் இப்பயிற்சி கூடத்தை பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த இளைஞர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், திறப்பு விழாவிற்கு பின், இக்கூடம் இதுவரை பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. இங்கு பளு துாக்குதல், கால்கள், கைகள், தோள்களுக்கான பயிற்சி செய்ய அதிநவீன கருவிகள், உடற்பயிற்சி சைக்கிள் உள்ளிட்ட, 14க்கும் மேற்பட்ட கருவிகள் பயன்பாடின்றி பழுதாகும் நிலையில் உள்ளன.
இளைஞர் கமலக்கண்ணன் கூறுகையில்,'' தனியார் இடத்தில் பெரிய அளவில் கட்டணம் செலுத்தி பயிற்சிக்கு செல்ல இயலாது. இப்பயிற்சி கூடம் திறப்பார்கள் என எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றாமே மிச்சம்,'' என்றார்.
இதுகுறித்து, அசோகபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்கும் நபரை நியமனம் செய்து, அவருக்கு ஊதியம் கொடுக்க, ஊராட்சி நிர்வாகத்தில் வழிவகை செய்யப்படவில்லை.இதனால் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்கவோ அல்லது அங்கு பயிற்சியாளரை நியமனம் செய்யவோ இயலவில்லை,' அலட்சியமாக பதில் அளித்தனர்.