பல்லடம் : பல்லடம் அடுத்த, கரைப்புதுார், கணபதிபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்டு, 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. விசைத்தறி, விவசாயம், சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சமீப நாட்களாக, கணபதிபாளையம் பகுதியில் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் வாகனங்கள் இடையே வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு முற்றி, அடிதடியாக மாறியது. இதையடுத்து, சாலை மறியல், கைகலப்பு என இரு தரப்பினர் இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. எஸ்.பி., செஷாங் சாய் நேரில் ஆய்வு செய்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சிலர், சினிமா காட்சிகளில் வருவதுபோல், அரிவாள், பட்டா கத்தியுடன் வீதியில் உலா வந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.தொழிலாளர்கள் நிறைந்த கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளில் போதைப்பொருள் சப்ளை அதிகரித்துள்ளதாகவும், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இச்சூழலில், தொடர்ந்து நடந்து வரும் மோதல் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சமூக விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளை சார்ந்து கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், 10 கி.மீ., கடந்து போலீசார் வரவேண்டும்.அதற்குள், சம்பவத்தின் போக்கு மாறிவிடக்கூடும் என்பதால், போலீசாரின் கண்காணிப்பு இப்பகுதியில் அவசியமாகிறது. பல்லடம் உட்கோட்டத்தில், 200க்கும் அதிகமான போலீசார் பணியில் உள்ளனர். இருப்பினும், போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக, போலீசார் குறித்த நேரத்தில் சம்பவ இடங்களுக்கு செல்வதில் தொய்வு ஏற்படுகிறது. கூடுதல் போலீசார் நியமிப்பதுடன், கரைப்புதூர், கணபதி பாளையம் பகுதிகளை மையமாகக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.