சோழவந்தான்--சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் முடிந்தாலும், மக்களின் போக்குவரத்து கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்காத நிலைதான் உள்ளது.இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ரயில்வே மேம்பால பணி 10 ஆண்டுகளாக நடக்கிறது. ரயில்வே கேட் அடைக்கும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இப்பாலம் கட்டப்படுகிறது. சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் துவங்கி வாடிப்பட்டி ரோட்டில் இறங்குகிறது.
குறுகலான பாலம்
பாலத்தின் அகலம் குறுகலாக உள்ளதால் எதிரெதிரே பஸ்கள் கடக்கும்போது, சைக்கிள் அல்லது டூவீலரை பஸ், லாரிகள் முந்திச் செல்வதில் சிரமம் உள்ளது. பாலத்தின் இருபுற சர்வீஸ் ரோடும் போதிய இடவசதியுடன் இல்லை. சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் பாலத்தில் ஏறவோ, இறங்கவோ முடியாது.பீடர் சாலை சர்வீஸ் ரோட்டில் வந்து பஸ் ஸ்டாண்டிற்குள் திரும்பவும் இடவசதி இல்லை. மேலும் நகரி வழி பஸ்கள் வாடிப்பட்டி ரோட்டில் இறங்கி திரும்பி வர வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் செலவு ஏற்படும்.மனித உரிமைகள் கழக மாவட்ட தலைவர் தவமணி கூறுகையில், ''ஜூன் மாதத்தில் பணிகள் முடியும் என அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை இழுபறியாக ஒரே நாளில் முடியும் வேலையை ஒரு வாரமாக இழுத்தடிக்கின்றனர். மக்களின் சிரமம் அதிகரிக்கிறது. பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் போராட உள்ளோம்'' என்றார்.ஆட்டோ டிரைவர் கவுரிநாதன் கூறுகையில், ''உரிய மாற்றுப்பாதை வசதி செய்து தராமல் பாலப் பணிகளை செய்கின்றனர். உரிய திட்டமிடல் இல்லாத பாலத்தை கட்டி முடித்தாலும் போக்குவரத்து வசதியில் ஏமாற்றம் தான் மிஞ்சும்'' என்றார்.