காரைக்கால் : எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது என, கவர்னர் தமிழிசை பேசினார். காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நீதித்துறை நடுவர் - 1, நீதித்துறை நடுவர் -2 ஆகிய இரண்டு புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த நீதிமன்றங்களை, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர், ஒரு வழக்கு விசாரணையை கவர்னர், முதல்வர் பார்வையிட்டனர். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, நீதிபதி இளந்திரையன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, தலைமைச் செயலர் ராஜிவ்வர்மா, புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், கலெக்டர் முகமது மன்சூர், சீனியர் எஸ்.பி.. லோகேஸ்வரன், மாவட்ட நீதிபதி அல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது; நீதியை தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வதுண்டு. உலகில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில், நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு. பசுவிற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற அரசன் மனுநீதி சோழனை போல் உலகத்தில் எங்கேயும் மக்களுக்கு நீதி வழங்கியவர்கள் இல்லை. எந்த மாநிலத்தில் நீதி வழுவாமல் அரசாட்சி நடக்கிறதோ அங்கே செல்வம் செழிக்கும். மக்கள் வாழ்க்கை பெருகும். கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நீதிநுால் திருக்குறள். நடுநிலை தவறாமல் தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.உலகம் முழுதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல் தான். கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பே, நீதி வழுவாமல் இருக்கும் துலாக்கோல் போல் நீதித்துறை இருக்க வேண்டும் என மற்ற நாடுகளுக்கெல்லாம் தமிழர்கள் வழிகாட்டி உள்ளனர் என்பது சிறப்பு.எளியவர்களுக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும் என நினைப்பதைப் போல எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனை கிடைக்க வேண்டும்
என்பது எனது விருப்பம். எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல நீதியை விரைவாக வழங்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை எல்லாம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விரைவாக முடித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகள். அரசியல்வாதிக்கு வாக்கு மூலதனம்; வக்கீலுக்கு நாக்கு மூலதனம். விவாதம் சரியாக செய்தால் எந்த வழக்கிலும் வெற்றி பெற்றுவிட முடியும்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: நீதிமன்றத்தில் அனைத்து வசதிகளும் செய்து தருவது அரசின் நோக்கம். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். நீதிமன்றத்தில் காலி பணி இடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.காரைக்கால் மாவட்டம் சிறப்பான வளர்ச்சியடைய அரசு உறுதுணையாக இருக்கும். விரைவில் காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லுாரி தொடங்கப்படும். சிறைச்சாலைஅமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கறிஞரான நான் ஏற்கனவே புதுச்சேரியில் ஒருநாள் மட்டும் கோர்ட்டுக்கு சென்றேன். தற்போது காரைக்கால் நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.