தமிழகத்தில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, 'அப்படியெல்லாம் இல்லை; போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது' என,பதிலளித்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன். அதன் உண்மை நிலையறிய கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நமது நிருபர் குழுவினர் களமிறங்கிய போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏழை, நடுத்தர மக்கள் சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்கள், பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்; தினமும், ..நான்காயிரம் வெளிநோயாளிகள் கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். சர்க்கரை, புற்றுநோய் பாதித்த நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். மாதம்தோறும் வந்து மருந்து பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது.
சமீபகாலமாக சர்க்கரை, இருதய பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் சரிவர கிடைப்பதில்லை என்றும் தனியார் மருந்துக்கடைகளில் விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு ஏழை நோயாளிகளை நிர்பந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதற்கு விளக்கமளித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனையில் மருந்து,மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. கூடுதலாக தேவைப்பட்டால் அரசிடமிருந்து பெற்று கொள்கிறோம். அங்கு இல்லாத பட்சத்தில் உள்ளூரில் செயல்படும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி நோயாளிகளுக்கு வழங்குகிறோம்,'' என்றார்.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட எனது உறவினருக்கு 7 விதமான மாத்திரைகள் எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஐந்து மாத்திரைகள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளதாம். இரண்டு மாத்திரைகளை வெளியே வாங்குமாறு தெரிவித்தனர். கையில் காசு இல்லாததால் என்ன செய்வது என தெரியவில்லை. - லதா, புளியகுளம்.டி.பி.,
நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மாத்திரை வாங்க வந்துள்ளேன். ஒரு சில நேரங்களில் மருந்து இல்லையென்றாலும், அடுத்த நாளில் கிடைத்து விடும்; இதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. - சண்முகம்இடையர்பாளையம்.

இரு பணிகளுக்கு ஒருவர்
பல்லடம் அரசு மருத்துவமனையில், சமையல் செய்வது மற்றும் சடலங்களை பராமரிப்பது என, இரண்டு பணிகளையும் ஒருவரே செய்து வரும் அவலம் நீடிக்கிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. தினசரி, 700க்கும் அதிகமான புற நோயாளிகள் வருகின்றனர். விபத்து அவசர சிகிச்சை மற்றும் கர்ப்ப கால சிகிச்சை உள்ளிட்டவை பிரதானமாக உள்ளது. போதிய பணியாளர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாதது இங்கு நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது.
குறிப்பாக, சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்து அனுப்பும் பணியை லோகநாதன் என்பவர் செய்து வருகிறார். இவரே, சமையல் செய்யும் பணியையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதேபோல், போதிய துப்புரவு பணியாளர்கள் இன்றி, மருத்துவமனையின் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஹேமலதா கூறுகையில், '''மருத்துவமனையில் கூடுதல் பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு சமைக்க பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். மருந்துவமனை நிர்வாகம் இதை சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை,'' என்றார். இதுகுறித்து, பல்லடத்தை சேர்ந்த நந்தகுமார் கூறுகையில், ''பல்லடம் அரசு மருத்துவமனையில் குப்பைகள், சுகாதாரமற்ற கழிப்பிடம் என மிகவும் பின்தங்கி உள்ளது. நோயாளிகள் சொல்வதை மருத்துவர்கள் காது கொடுத்தும் கேட்பதில்லை. வார்டுக்குள் தண்ணீர் வருவதில்லை. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.
பல்லடம் அண்ணாதுரை கூறுகையில், ''விபத்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்பெரும்பாலும், மேல் சிகிச்சைக்கு பிற மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லையா, அல்லது மருத்துவர்கள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. வட்டார அளவில் மக்கள் பயன்பெறவே இங்கு மருத்துவமனை உள்ளது. எதற்கெடுத்தாலும் பரிந்துரை என்றால், இங்கு மருத்துவமனையே தேவையில்லையே,'' என்றார்.

அடிப்படை வசதி இல்லை
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 300 படுக்கை வசதி கொண்ட சிறப்பு உள் நோயாளிகள் பிரிவு உள்ளது. இங்கு, பொது மருத்துவம், டயாலிசிஸ், பெண்கள், குழந்தைகள் நலப்பிரிவு, எலும்பு பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, மன நல மருத்துவ பிரிவு, எம்.ஆர்.ஐ., மற்றும் சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஊட்டியில் மருத்துவ கல்லுாரி வந்ததால், அந்த மருத்துவமனை கல்லுாரியுடன் இணைக்கப்பட்டது.
ஆனால், இங்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவம் சார்ந்த வசதிகள் இருந்தாலும், போதியளவு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை.ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் மனோகரி கூறுகையில், ''மருத்துவமனையில், 64 டாக்டர்கள் பணியில் உள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கேற்ப இருப்பில் உள்ளன.
உயர்தர சிகிச்சைக்காக வருவோருக்கு, குறிப்பிட்ட மருந்து இல்லை என்றால், மருத்துவமனை நிதியில் இருந்து உடனடியாக வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு தேவையான கழிப்பிட வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.
கூடலுார் சேரம்பாடியை சேர்ந்த நந்தகுமார்- கூறுகையில், ''நிறைமாத கர்ப்பிணியான எனது தங்கையை, ஊட்டி 'சேட்' மகேப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை குறித்து டாக்டரிடம் கேட்க, பார்வையாளர் நேரம் காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை என்று குறிப்பிட்டுள்ளனர். தொலைதூரத்திலிருந்து வருபவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, பார்வையாளர் நேரத்தை மதியம் 2:00 மணி வரை நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.
டாக்டர், நர்ஸ் பற்றாக்குறை
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், டாக்டர், நர்ஸ்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற வருவோர் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும், 2,500 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, புற்றுநோய் தவிர்த்து, மற்ற அனைத்து நோய்களுக்கும், மருந்துகள் கையிருப்பில் உள்ளன.டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருந்தாளுனர்கள் பற்றாக்குறையால், உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு, சிகிச்சை வழங்குவதிலும், மருந்துகள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, 450 படுக்கை வசதிகள் இருக்கும் நிலையில், மூன்று மருந்தாளுனர்கள் மட்டுமே உள்ளனர். 60 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 30 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களில் சிலர், பொள்ளாச்சியை சுற்றியுள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைகளுக்கும், விடுமுறையிலும் சென்றுள்ளதால், 10 முதல் 15 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.இதனால், தோல், நரம்பியல் நோய்கள், காது, மூக்கு தொண்டை பிரிவுகளுக்கு ஒரு டாக்டர் கூட இல்லை.
எலும்பியல் பிரிவுக்கு, ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். சராசரியாக, 10 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் வீதம், பணியில் இருந்தால் தான், தரமான சிகிச்சை அளிக்க முடியும்.ஆனால், நிரந்தர பணியாளர்கள் 47 பேர், தொகுப்பூதிய பணியாளர்கள் 32 பேர், கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்டவர்கள் 10 பேர் என, ஒட்டுமொத்தமாக 89 நர்ஸ்கள் பணிபுரிகின்றனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு), கார்த்திகேயன் கூறுகையில், ''மருத்துவமனையில் சில பிரிவுகளுக்கு, டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை, கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படும். கேன்சர் தவிர்த்து, அனைத்து நோய்களுக்கும், மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இருதய நோயாளிகளுக்கு, ஆஞ்சியோ தவிர்த்து, மற்ற சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன,'' என்றார்.
பற்றாக்குறையால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே, டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவுக்கு வருகின்றனர். அதிலும், பெரிய விபத்துகள் நடந்தால், அன்று, சிகிச்சை பெற வருவோரின் பாடு திண்டாட்டம் தான். இப்பிரச்னைநர்ஸ்களும், நோயாளிகளுக்கு அவ்வப்போது வாக்குவாதத்தை ஏற்படுகிறது.
-அனிதா, ஜி.சங்கம்பாளையம், பொள்ளாச்சி.

தேவை 16: இருப்பதோ ஆறு
கோத்தகிரி அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், தாலுகா அரசு மருத்துவமனை உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன. டாக்டர் விக்னேஷ் கூறுகையில், ''நாளொன்றுக்கு, 150 முதல் 200 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
டாக்டர்கள் பரிந்துரைக்கும், மருந்து, மாத்திரைகள் தடையின்றி கிடைக்கின்றன. இங்கு, 66 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அவசர சிகிச்சை தேவைப்படுவோர், ஊட்டி அல்லது கோவை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்,''என்றார்.ஆனால், 14 டாக்டர்கள் பணிபுரியவேண்டிய மருத்துவமனையில், ஆறு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், கூட்டம் அதிகரிக்கும் போது, போதிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. காலி பணியிடங்களை நிரப்பினால், காலதாமதம் இன்றி, சிகிச்சை அளிக்கலாம்.
- நமது நிருபர் குழு -
Advertisement