விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 3,267 மாணவியர் பயன்பெற ஓராண்டிற்கு ரூ.3.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 19 கல்லுாரிகளை சேர்ந்த 788 மாணவியருக்கு வங்கி கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக புதுமைப் பெண் என்ற திட்டத்தினை கடந்த செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் முதல்வர் துவக்கி வைத்தார்.பெண்களுக்கு உயர் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், இடைநிற்றல் விகிதத்தை குறைப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.இதன் மூலம் சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 54 கல்லுாரிகளை சார்ந்த 3,267 மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக, ஓராண்டிற்கு 3 கோடியே 92 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக 19 கல்லுாரிகளை சேர்ந்த 788 மாணவிகளுக்கு வங்கி, கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.