புதுச்சேரி : 'சர்க்கிள் டி பாண்டிச்சேரி'க்கு புதிய வாடகை நிர்ணயிக்காமலும், வாடகை நிலுவை ரூ. 13.50 கோடியை வசூலிக்காமலும் அரசுக்கு வருவாய் இழப்பை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர் என, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் சட்டசபையை ஒட்டி சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற அமைப்புக்கான கட்டடம் அமைந்துள்ளது. விதிகளை மீறி செயல்படும் இந்த கட்டடம், புதிய வாடகை ஒப்பந்தம் போடாமல் உள்ளது.
வாடகை நிலுவைத் தொகை 13.50 கோடி ரூபாயை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பி, 8 ஆண்டுகளாக ஜப்தி நடவடிக்கையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் எடுக்காமல் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த ஜூன் 3ம் தேதி, எங்கள் அமைப்பு மூலம் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பினோம். அதற்கு, ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று மாத காலகெடுவுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.