புதுச்சேரி : 'எட்டு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் நாடு 50 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது' என காங்., மாநில தலைவர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த எட்டு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் இந்தியாவின் கஜானா காலியாகி, பெரும் கடனில் இருக்கிறது. 20 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு கடன் ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு, 2.5 லட்சம் கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் கட்டியாக வேண்டும். இன்றைய தேதியில் 8 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி கையிருப்பில் எடுக்கப்பட்டு, குறைந்துள்ளது.
இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக மிகவும் வீழ்ச்சி அடைந்து, பங்கு மார்க்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இது மேலும் உயரும் என்று உலக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் அனைத்து பொருட்களின் விலைகளும் மேலும் உயரும். எனவே, இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது என பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். இந்தியா இன்றைக்கு உலக பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து 164வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. நாம் எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு அந்நிய செலவாணி கையிருப்பிலிருந்து பணத்தை எடுத்து கடனை செலுத்தி வருகிறது இந்தியா. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. இது போன்ற சூழ்நிலை தான் இலங்கைக்கும் ஏற்பட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.