வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், பணி மூப்பு தகுதி இருந்தும், பென்ஷன் கிடைக்காமல், 3,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அல்லாடுகின்றனர்.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், 1997 முதல் 2000 ஆண்டு வரை, 3,942 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அப்போதைய தி.மு.க., அரசு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை.
அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, வேலை நியமன தடைச் சட்டத்தை அமல்படுத்தியதால், அவர்கள் நியமனம் செய்யப்படாமல் பணி செய்தனர்.போக்குவரத்துக் கழகங்களில், 240 நாட்கள் பணியாற்றினால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.அதற்கு மாறாக, 2005ல் நடந்த ஊதிய ஒப்பந்த பேச்சின்போது, 2005 செப்., முதல் 2006க்குள் பணி நியமனம் செய்ய உடன்பாடு ஏற்பட்டு, பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. அப்போது, எட்டு ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருந்தனர்.இந்நிலையில், 2003 ஏப்ரலில் பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
![]()
|
ஆனாலும், பணியில் சேர்ந்த நாள் முதல், அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கும்படி போராடினர்.கடந்த 2010ல் நடந்த ஊதிய ஒப்பந்தத்தின்போது, பணியில் சேர்ந்த நாள் முதல், ஊதிய உயர்வுக்கான பணி மூப்பு தொடங்குவதாக உறுதி அளிக்கப்பட்டு, சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், பென்ஷன் திட்டத்தில் மட்டும் அவர்கள் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், பலர் இறந்து விட்டனர். இந்தாண்டில் ஓய்வு பெறும் நிலையில், நுாற்றுக்கணக்கானோர் உள்ளனர்.இதுகுறித்து, எஸ்.வி.எஸ்., ஆம்ஆத்மி தொழிற்சங்க மாநில அமைப்புச் செயலர் சேகர் கூறுகையில், ''அரசியல் காழ்ப்புணர்ச்சியால், தகுதியிருந்தும் பென்ஷன் கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர். இது தொடர்பாக விரைவில் வழக்கு தொடர உள்ளோம்,'' என்றார்.