புதுச்சேரி : சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், என்.எல்.சி.,யுடன் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராணன், துறை செயலர் அருண், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, என்.எல்.சி., இயங்குனர் (சுரங்கம்) சுரேஷ்சந்திரசுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:என்.எல்.சி., நிறுவனம்,. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைக்காக, ஒரு பகுதியை உருவாக்கி உள்ளது.அதன்படி, நெய்வேலியில் கல்வி, சுரங்கங்கள் பற்றிய ஆய்வு, சுற்றுச்சூழல் சுற்றுலா, சுரங்கத்திற்குப் பிந்தைய பகுதிகளின் புத்துயிர், படகு சவாரி, சிற்றுண்டிச்சாலை, சுரங்க அருங்காட்சியகம், மூடப்பட்ட சுரங்கங்களின் பாதுகாப்பான பகுதிகள், விளையாட்டு மண்டலங்கள், சாகுபடி திட்டுகள், காட்சிப் புள்ளி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முழு சுற்றுலா மண்டலம் என்.எல்.சி.,யால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம், என்.எல்.சி.,யின் சுற்றுலா விளம்பரத்திற்கான பிராண்டிங், விளம்பரம் மற்றும் முன்பதிவு அசோசியேட்டாக இருக்கும்.புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகம் முழுவதும் இயற்கை அழகுடன் அமைக்கப்பட்டு, ஓராண்டு காலம் என்.எல்.சி.,யால் பராமரிக்கப்படும்.சுற்றுலா பயணங்களுக்கான கட்டணம், என்.எல்.சி.,க்கு வருகை தரும் ஒவ்வொரு குழுவிற்கும் நியமிக்கப்பட்ட கட்டணங்களின்படி புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கப்படும்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மைன் டூரிசம், நெய்வேலிக்கு கல்வி சுற்றுலாப் பயணங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.