வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையில் குண்டு வீசி கைதான நபர்கள் மீது தே.பா., சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் செப்., 22, 23ம் தேதி என இரு நாட்களும், கெரசின் குண்டு, பெட்ரோல் குண்டு வீச்சு, பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. மாநகரம் மட்டுமின்றி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் இச்சம்பவங்கள் நடந்தன.தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, சட்டம்- ஒழுங்கு கூடுதல்டி.ஜி.பி.,யை கோவைக்கு செல்லுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, கோவை வந்த கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன், ஒரு வாரம் தங்கியிருந்து வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டார். பாதுகாப்பு பணிக்காக பிற மாவட்ட போலீசாரும் கோவை மாவட்டம் அனுப்பி வைக்கப்பட்டனர். கண்காணிப்பு, வாகன தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மாவட்டத்தில் மீண்டும் அமைதி திரும்பியது. போலீசார் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, குண்டு வீச்சில் தொடர்புடைய நபர்களில் பெரும்பகுதியினர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
அவர்களுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதை தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்துள்ள போலீசார், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.அதன்படி, கைதான நபர்களின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. அரசின் உயர் மட்டத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட உள்ளன.