சர்வதேச சைக்கிள் வீரர்கள் யூனியன், அடுத்த மாதம் ஒரு மணி நேர சாதனை பந்தயத்தை நடத்தவிருக்கிறது. இதில், இத்தாலிய சைக்கிள் வீரர் பிலிப்போ கான்னா பங்கேற்கிறார். அவருடைய சைக்கிளை தயாரித்து கொடுத்தது இத்தாலிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான 'பினாரெல்லோ!'
இதில் என்ன சிறப்பு? 'போல்டீ எப்.எச்.எச்.ஆர்3டி' என்ற இந்த மிதி வண்டியை பிலிப்போவுக்காகவே ஒரே மணி நேரத்தில் முப்பரிமாண அச்சியந்திரத்தில் தயாரித்து தந்திருக்கிறது பினாரெல்லோ. விண்வெளி ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் 'ஸ்கால்மாலாய்' என்ற உலோகக் கலவையால், முப்பரிமாண அச்சியந்திரத்தில் தயாரான இந்த சைக்கிளில், திமிங்கிலத்தின் தோலில் உள்ள சிறிய கீறல்களைப் போன்ற வடிவமைப்பும் இருக்கிறது.
திமிங்கலம் கடலுக்கடியில் நீரைக் கிழித்து வேகமாக நீந்த இந்த கீறல்கள் உதவுகின்றன. அதேபோல, பிலிப்போ, காற்றைக் கிழித்து சைக்கிளை மிதித்துச் செல்ல, போல்டீயின் முன்பகுதியில் உள்ள சிறு கீறல்கள் உதவும்.