ஓமலுார்,: டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவித்த சேலம் மேற்கு பா.ம.க.,--எம்.எல்.ஏ., அருளுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே உள்ள முத்து நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. பாகல்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, கோட்டை மாரியம்மன், பச்சனம்பட்டி ஆகிய ஊராட்சி மையப்பகுதியில் இக்கடை அமைந்துள்ளது.
பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியருக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. 2019 முதல் இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, பலகட்ட போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் சேலம் மேற்கு பா.ம.க.,- எம்.எல்.ஏ.,அருள், அக்.,7ம் தேதி, மேற்படி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தார்.
இது தொடர்பாக நேற்று முத்துநாயக்கன்பட்டியில் அருள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், ''டாஸ்மாக் அதிகாரிகள் விரைவில் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும்,'' என, கூறினார்.
அதற்கு அப்பகுதியினர்,'கடையை மாற்றும் வரை, பூட்டி வைக்க வேண்டும்' என போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். போராட்டம் குறித்து பொதுமக்களுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக எம்.எல்.ஏ.,அருள் தெரிவித்தார். கூடுதல் எஸ்.பி.,கென்னடி, ஓமலுார் டி.எஸ்.பி.,சங்கீதா பேச்சுவார்த்தையில்
பங்கேற்றனர்.
கடையை மூடுவோம்: எம்.எல்.ஏ.,
இது தொடர்பாக எம்.எல்.ஏ., அருள் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டம் முத்து
நாயக்கன்பட்டி சாலை டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, கடந்த, 2019 பிப்.6ல், பொதுமக்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, வருவாய்த்துறை, கலால், போலீஸ் துறையினர், ஒரு மாதத்தில் கடை அகற்றப்படும் என அளித்த உறுதி மொழி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஆக.,15 சுதந்திர தினத்தன்று, முத்துநாயக்கன்பட்டியை சுற்றியுள்ள, பாகல்பட்டி, நல்லாகவுண்டம்பட்டி, செல்லபிள்ளை குட்டை, பச்சனம்பட்டி, கோட்டை மாரியம்மன் கோவில், செம்மண்கூடல், மாங்குப்பை, கருக்கல்வாடி, அழகுசமுத்திரம் ஆகிய கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகள் எந்தவித நட
வடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, திட்டமிட்டபடி, நாளை காலை, 10:00 மணிக்கு பெண்களை திரட்டி, டாஸ்மாக் கடையை மூடி பூட்டு போடுவோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.