கரூர், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு 'சம்மாளி' என்று அழைக்கப்படும், 'மெகா சைஸ்' காலணியை, காணிக்கையாக வழங்க பக்தர்கள், அதனை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழாவின்போது, பக்தர்கள் சுவாமிக்கு பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பஞ்சாயத்து சின்னத்தம்பிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள், 'சம்மாளி' என்ற 'மெகா சைஸ்' காலணியை தயார் செய்து, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமிக்கு ஆண்டுதோறும் காணிக்கையாக செலுத்தி, வருகின்றனர்.
நடப்பாண்டு, 'சம்மாளி'யை தயார் செய்து, தலையில் வைத்துக் கொண்டு, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், தாரை தப்பட்டை முழங்க, ஊர்வலமாக திண்டுக்கல்லில் இருந்து கடந்த, 30ம் தேதி புறப்பட்டனர். இவர்கள் நேற்று காலை, கரூர் வந்தடைந்தனர்.
இதுகுறித்து, சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:
கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, செருப்பு காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை. கடந்தாண்டு பக்தர் ஒருவர் கனவில், வெங்கடரமண சுவாமி வந்து, காலணியை காணிக்கை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்களிடம் நிதி திரட்டினோம்.
பின், தோலை வாங்கி மெகா சைசில், 'சம்மாளி'யை தயார் செய்து, கரூர் மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் பல முக்கிய நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்கிறோம். வரும், 8ல், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையன்று, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் பூஜை செய்து, காணிக்கையாக வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.