கரூர் பசுபதிபாளையம் - ராமானுார் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் அருகே பசுபதிபாளையம், ராமானுார் பிரதான சாலையில், ஏராளமான வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்களில், ராமானுார் பிரதான சாலை வழியாக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், ராமானுார் பிரதான சாலை, பல மாதாங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. சில இடங்களில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு முற்றிலும் பயனற்ற நிலையில் உள்ளது.
மேலும், போதிய லைட் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, பசுபதிபாளையம் - ராமானுார் பிரதான சாலையை, புதிதாக அமைக்க வேண்டியது அவசியம்.