வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி என்ற கட்சியின் பெயரை, அக்கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரீய சமிதி என மாற்றினார்.
இந்த விழாவில் அவரது மகளும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கவிதா பங்கேற்காததும், இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் குழுவில் அவர் இடம்பெறாததும் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. அக்கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
கட்சி பெயர் மாற்றும் நிகழ்ச்சிக்கு முன்னதாக, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற நிலையில் கவிதா மட்டும் பங்கேற்காமல், வீட்டில் தசரா பண்டியை கொண்டாட்டத்தில் இருந்தார். மேலும், பெயர் மாற்றம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலும் கவிதாவின் பெயர் இல்லை. இதுவும் பலருக்கு கேள்வியை எழுப்பியது.

இது போதாது என, மனுகோடா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அதிலும் கவிதாவின் பெயர் இல்லை. அதேநேரத்தில் பிஆர்எஸ் கட்சி என பெயர் மாற்றப்பட்ட விழாவில் கேடிஆர் கலந்து கொண்டார். இதனால், பிஆர்எஸ் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.