போத்தனுார்: ''கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு,'' என, எஸ்.ஐ.ஓ., தேசிய செயலாளர் பவாஸ் ஷாஹின் கூறினார்.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ.,), 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் தேசிய தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், கோவை கரும்புக்கடை பகுதியில் நேற்று அமைப்பின் தேசிய செயலாளர் பவாஸ் ஷாஹின் நிருபர்களிடம் கூறியதாவது:ஏற்றுக்கொள்ள இயலாத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் மாறுபாடு கிடையாது.
அதேவேளையில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் ஒரு அமைப்பின் மீது தடை விதிப்பது கூடாது. இளைஞர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.மதரஸாக்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக உள்ளன. இவை பெரும்பாலும் தானமாக பெறப்பட்ட நிலங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. தேசிய கல்வி கொள்கையிலுள்ள சில அடிப்படைகளை தவிர்த்து பார்த்தால் ஏற்றுக்கொள்ளலாம்.
சமூக அமைதி, சமூகங்களுக்கு இடையிலான இணக்கம், அரசியல், பொருளாதாரம், சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை இன்று புறந்தள்ளப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள், அடக்குமுறை கைதுகள் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். இவற்றை களைய இவ்வியக்கம் தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட தலைவர் முஹமது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.