ராஜஸ்தானில், துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆறு பேர், குட்டையில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நந்த்லா கிராமத்தில் துர்கா பூஜை நடைபெற்றது. இதையடுத்து, துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, அங்குள்ள ஒரு குட்டையில் சிலையை கரைக்க இறங்கிய ஆறு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.''மழை நீர் தேங்கிய இந்த குட்டையில் உள்ளூர் மக்கள் அடிக்கடி சிலையை கரைப்பது வழக்கம்.
ஆனால், இந்த முறை குட்டையின் ஆழம் அவர்களுக்கு தெரியவில்லை. சிலையை கரைக்கச் சென்று மூழ்கிய ஆறு இளைஞர்களில், ஐந்து பேர் உடல்கள் முதலில் மீட்கப்பட்டன. பின்னர், தீவிரமாக தேடி ஆறாவது இளைஞரின் உடல் மீட்கப்பட்டது, '' என, அஜ்மீர் போலீஸ் எஸ்.பி., சுனா ராம் ஜாத் தெரிவித்தார்.