ஊட்டி: ஆயுதபூஜை விடுமுறையை தொடர்ந்து ஊட்டிக்கு ஐந்து நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நிலவும் 'குளு,குளு' காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.தற்போது, இரண்டாவது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில், 4 லட்சம் மலர் செடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறையையொட்டி ஊட்டிக்கு கடந்த, 1 முதல், 5ம் தேதி வரை, ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதில், கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா ஸ்தலங்களில் பயணிகள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொட்டபெட்டா சிகரத்தில், சமீபத்தில் கோவையை சேர்ந்த பெண் லீலாவதி பாறையின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த இடத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதால், 'சூசைடு பாய்ன்ட்' பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சாலைகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.