தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கியுள்ள, 'பாரத் ராஷ்ட்ரீய சமிதி' கட்சிக்கு வி.சி., ஆதரவு அளித்துள்ளதால், அக்கட்சி தனி பாதையில் பயணிக்கிறதா என்ற சந்தேகம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், வி.சி., சார்பில் திருமாவளவன் தனிச் சின்னத்திலும்; ரவிக்குமார், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.சட்டசபை தேர்தலில், அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, மாற்று அணிக்கு சென்றாலும், அக்கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களின் பதவிக்கு ஆபத்து இல்லை.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., தயாராக இருப்பதால், வி.சி., தற்போது தனி பாதையில் பயணிக்க துவங்கியுள்ளாக கூறப்படுகிறது.அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு எதிராக, வரும் 11ல் தமிழகம் முழுதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சியை, வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.
அதேபோல் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி பங்கேற்றன.இதில் பங்கேற்பது குறித்து, தி.மு.க., தலைமையிடம், இக்கட்சிகள் கலந்தாலோசிக்க வில்லை என தெரிகிறது.
இந்நிலையில், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளார்.தெலுங்கானாவில் நடந்த அதன் துவக்க விழாவில், தி.மு.க., சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அப்போது, பிற மாநில தலைவர்களிடம் திருமாவளவனை, சந்திரசேகர ராவ் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
இதனால் திருமாவளவன், சந்திரசேகர ராவ் தலைமையில் உருவாகும் அணியில் இடம்பெற விரும்புகிறார் என்பதையும், காங்கிரஸ் அணியில் நீடிக்க விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டதாகஆளும் தி.மு.க., கருதுகிறது.
இது குறித்து, வி.சி., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, தெலுங்கானா முதல்வர் முன்வர வேண்டும் என்று தான், பாரத் ராஷ்ட்ரீய சமிதி துவக்க விழாவில் திருமாவளவன் பேசியுள்ளார்' என்றார்.தி.மு.க., கூட்டணியை நெருங்கும் பா.ம.க., மற்றும் தேசிய அளவில் கவனம் ஈர்ப்பு போன்ற காரணங்களால், வி.சி., தனி பாதையில் பயணிக்க விரும்புவதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
--- நமது நிருபர்- --