வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நம் நாட்டில் ராணுவம், கடற்படை, விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் ஏற்படுத்தப்பட்டது.
![]()
|
முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், 2021 டிசம்பரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
தனித்தனியாக ஆய்வு
இதையடுத்து, புதிய தளபதியை நியமிப்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. நீண்ட தாமதத்துக்கு பின், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் சமீபத்தில் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். முப்படைகளின் தலைமை தளபதிக்கு அவரது பணிக்காலத்தில் சில சவால்கள் உள்ளன. அவற்றை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
முதலாவதாக முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவை அனைத்தையும் பாதுகாப்பு சவால்களை கவனிக்கும் ஒரே அமைப்பாக செயல்பட வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், இதற்கான முயற்சிகளை துவக்கினார். ஒருங்கிணைப்பு பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து, ஒவ்வொரு படைப் பிரிவும் தனித்தனியாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்தப் பணி முடிவதற்குள், பிபின் ராவத் விபத்தில் இறந்து விட்டார். இப்போது இதற்கான சுமை, அனில் சவுஹான் மீது விழுந்துள்ளது.அடுத்ததாக, முப்படைகளிலும் முக்கியமான தளவாடங்களுக்கு பற்றாக்குறை உள்ளது. மேலும், கையிருப்பில் உள்ள ஆயுதங்கள், தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக இல்லை. எனவே, அவற்றுக்கு பதிலாக புதிய தளவாடங்கள், ஆயுதங்களை வாங்கி, ஒவ்வொரு படைப் பிரிவுக்கு ஒதுக்க வேண்டிய சவாலும் உள்ளது.
![]()
|
வலியுறுத்தல்
புதிதாக விமானம்தாங்கி கப்பலை கட்டமைக்க வேண்டும்என, கடற்படை தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அதிகமான போர் விமானங்கள் வேண்டும் என, விமானப்படையும் வலியுறுத்துகிறது. இவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை, முப்படைகளின் புதிய தலைமை தளபதிக்கு உள்ளது.எல்லை பகுதியை பொறுத்தவரை, பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அதை சமாளிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், எதிர்கால போர் சூழலுக்கு உகந்த வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.