. சென்னை-''ஏழை மக்களுக்கு உதவும் 2 கிலோ, 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை, தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளை உள்ளடக்கிய கூட்டுறவு கடைகளுக்கு விரிவுபடுத்தப்படும்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், 2 கிலோ, 5 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கிறது.அவற்றின் விற்பனை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு அங்காடியில் நேற்று துவங்கியது.

விற்பனையை துவக்கி அமைச்சர் பெரியசாமி பேசியதாவது:கடந்த 1980 கால கட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவது சிரமம். ஒரு எம்.பி., பரிந்துரையில் ஆண்டுக்கு 50 பேருக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்; இல்லையேல் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். கடந்த 1996ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான், சிலிண்டர் இணைப்பு பெற ஏற்படும் செலவுக்கு கூட, கூட்டுறவு வங்கிகளில் கடன் தரப்பட்டு, பின், அந்த கடன்களும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் லட்சக்கணக்கான மக்கள், சிலிண்டர் இணைப்பு பெற்று பயனடைந்தனர். சிலிண்டர் இணைப்பு பெற முகவரி சான்று அவசியம்; டிபாசிட் தொகை அதிகம். எனவே, இடம்பெயரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என, அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் 2 கிலோ, 5 கிலோ சிலிண்டர் விற்பனை துவக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காட்டி சிலிண்டர் வாங்கலாம். இத்திட்டம், தமிழகம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளை உள்ளடக்கிய கூட்டுறவு கடைகளில் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் அசோகன், சமையல் காஸ் சிலிண்டர் பிரிவின் தமிழக தலைமை பொது மேலாளர் தனபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏழை மக்கள் தேவைக்கு ஏற்ப வாங்கும் வகையில், தேனாம்பேட்டை காமதேனு அங்காடியில், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், சோப்பு, 'டூத்' பேஸ்ட், பிஸ்கட் உள்ளிட்ட 24 பொருட்கள் தலா, 10 ரூபாய் விலைக்கு விற்கும் திட்டத்தையும், அமைச்சர் பெரியசாமி நேற்று துவக்கி வைத்தார்