சென்னை--காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, நாளை மறுதினம் சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியுள்ள ஆபத்து காலநிலை மாற்றம். இப்போது வெப்பநிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பு, உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறதுவரும், 2100ம் ஆண்டு-க்குள் சென்னை மாநகரின் மொத்த பரப்பில் 16 சதவீதம்; அதாவது 67 சதுர கி.மீ., கடலில் மூழ்கிவிடும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடற்கரையில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்த, தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. காலநிலை மாற்ற அவசர நிலையை பிறப்பித்து, புவிவெப்பமாவதை தடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், நாளை மறுதினம் காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை, 'காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான சென்னை ஓட்டம்' என்ற தலைப்பில், மாரத்தான் ஓட்டம் நடக்க உள்ளது.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.