பெ.நா.பாளையம்: 'துடியலுார் டியூகாஸ் விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால், பா.ஜ., போராட்டத்தில் ஈடுபடும்' என, மாநில விவசாயிகள் அணி தலைவர் நாகராஜ் கூறினார்.

கோவை துடியலுாரில் கூட்டுறவு விவசாயம் சேவா ஸ்தாபனம், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் வேளாண்துறை அளித்த உர ஒதுக்கீட்டு அளவைவிட, கூடுதலாக கொள்முதல் செய்ததன் காரணமாக லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று டியூகாஸ் நிறுவனத்துக்கு வந்த பா.ஜ., விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
டியூகாஸ் நிறுவனத்தில், 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும், எவ்வித தொடர்பும் இல்லை. சூப்பர் பாஸ்பேட் என்ற உரம் அதிகப்படியாக கொள்முதல் செய்ததன் காரணமாகவே லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு தனது உத்தரவில், உர கொள்முதல் லைசென்சை மட்டும் ரத்து செய்ய வேண்டுமென கூறியது.
ஆனால், அதற்கு மாறாக, மாநில அரசு, டியூகாஸ் நிறுவனத்தில் மொத்தம் உள்ள, 14 லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளது. லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால், 450 கோடி ரூபாய் உர வணிகம் நடைபெறவில்லை.மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி கோவையில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.