காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள 11 கைத்தறி கூட்டுறவு சங்கங்களின், இந்தாண்டு பட்டு சேலை விற்பனை இலக்காக 133 கோடி ரூபாயை, கைத்தறி துறை நிர்ணயித்துள்ளது. கடனில் தத்தளிக்கும் சிறிய சங்கங்கள், போதிய நெசவாளர்கள் கிடைக்காமல் கவலையில் உள்ளன.

பட்டு கைத்தறி சேலைகளுக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில், பட்டு சேலை வாங்க, வெளி மாவட்டம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து, ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களை, இடைத்தரகர்கள் பலர் ஏமாற்றி, போலி பட்டு சேலைகளை விற்பதால், கைத்தறி துறையின் கீழ் செயல்படும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கான விற்பனை பாதிக்கப்படுகிறது.
பாதிப்பு
இடைத்தரகர்கள் தொல்லை ஒருபுறம் என்றால், பட்டுக்கான அங்கீகாரமான 'சில்க் மார்க்' ஏதுமின்றி, போலி பட்டு சேலை விற்கும் தனியார் பட்டு சேலை கடைகளால், கைத்தறி சங்கங்களின் பட்டு சேலை விற்பனை பாதிக்கப்படுகிறது.
இது போன்ற பிரச்னைகளுக்கு நடுவிலும், கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் பட்டு சேலை விற்பனை, 2020 - 21ம் ஆண்டைவிட, 2021 - -22ல் அதிகரித்துள்ளது.கடந்த 2020- - 21ல், 77.5 கோடி ரூபாய் விற்பனையான நிலையில், 2021- - 22ல் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
கடந்தாண்டு விற்பனை அதிகரிப்பு காரணமாக, நடப்பு 2022- - 23ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கை, கைத்தறி துறை கமிஷனர் ராஜேஷ், 33 சதவீதம் வரை அதிகரித்து நிர்ணயம் செய்துள்ளார்.இந்தாண்டு, மாவட்டத்தில் உள்ள 11 கைத்தறி சங்கங்களுக்கும் சேர்த்து, 133.5 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத கைத்தறி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரத்தில், 10க்கும் மேற்பட்ட கைத்தறி சங்கங்கள் நலிந்த நிலையில் உள்ளன. மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள கடனை அடைக்க முடியாமலும், உற்பத்தியை பெருக்க முதலீடு இல்லாமலும் சிரமப்பட்டு வருகிறோம்.

நம்பிக்கை
நடப்பாண்டுக்கு, விற்பனை இலக்காக 1 கோடி, 1.5 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த இலக்கை எங்களால் எளிதாக எட்ட முடியாது.அண்ணா, முருகன் போன்ற பெரிய சங்கங்கள், இந்த விற்பனை இலக்கை எட்டிவிடும் நம்பிக்கை உள்ளது.
ஆனால், சிறிய, நலிவடைந்த சங்கங்கள் இலக்கை அடைவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. மேலும், நெசவாளர்கள் பலர், குறைவான கூலி காரணமாக, வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர்.பெரிய சங்கங்களே நெசவாளர்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, நலிந்த சங்கங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றுமதி செய்யலாம்
சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ரகங்களை, துண்டு பிரசுரம், தொலைக்காட்சி, வானொலி போன்றவை மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். புதிய பட்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டும். விற்பனையை அதிகரிக்க மார்க்கெட்டிங் கம்பெனியை அணுக வேண்டும். வெளிநாடுவாழ் தமிழர்களிடையே ரகங்களை பிரபலப்படுத்தி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும்.- ராஜேஷ், கைத்தறி துறை கமிஷனர்

பெரிய விற்பனை மையம் தேவை!
காந்தி சாலையில் உள்ள கடைகள், சொத்துக்களை, தனியார் பட்டு சேலை கடை அதிபர்கள் தொடர்ந்து வாங்கிக் குவித்து வருகின்றனர். அவர்களின் இந்த முதலீடு, கைத்தறி சங்கங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாளடைவில், பட்டு விற்பனையில், தனியார் கடைகளே பிரதானமாக மாறும் சூழல் உள்ளது.
கைத்தறி சங்கங்களை நம்பி, ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. காந்தி சாலையில், கைத்தறி சங்கங்களுக்கான ஒருங்கிணைந்த விற்பனை வளாகம் அமைத்தால் மட்டுமே, விற்பனையை அதிகரிக்க முடியும்.