காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில், தனியார் ஏஜன்சி கேஷியர், டிரைவரை தாக்கி, 11 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
காரைக்குடியில் சிகரெட் விற்பனை ஏஜன்சி நடத்தி வருபவர் திருநாவுக்கரசு 51. இவரிடம் கேஷியராக வேலை செய்பவர் காந்தி நகர் சேர்ந்த விக்னேஷ் 31.இவரும், டிரைவர் தமிழரசனும் 30, நேற்று மாலை, கடைகளில் வசூல் முடித்து விட்டுமினி லாரியில் கோட்டையூர் பேரூராட்சி அழகாபுரி நகர் அருகே வந்தனர். அப்போது, ஐந்து பேர் கும்பல் அவர்கள் வாகனத்தின் முன் காரை நிறுத்தி மறித்தனர்.
கேஷியர் விக்னேஷ், டிரைவர் தமிழரசனை அரிவாளால் தாக்கி, பையில் வைத்திருந்த 11 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர்.பள்ளத்துார் போலீசார், காயம்பட்டவர்களை வேலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். டி.எஸ்.பி., வினோஜி விசாரிக்கிறார்.