மயிலாடுதுறை: சீர்காழி அருகே கணவர் உதவியுடன் குழந்தை பிரசவித்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்த மருத்துவ குழுவினருக்கு மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் கிரிஸ்டோபர், 40. இவரது மனைவி பெல்சியா, 35. கருவுற்றது குறித்து சுகாதார செவிலியருக்கு இவர் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார்; மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார்.கடந்த 1ம் தேதி கிராம செவிலியர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்த போது காரைக்குடியில் மருத்துவ சிகிச்சை பெறுவதாக கூறிய பெல்சியா, அங்கு செல்லவில்லை. வீட்டிலேயே கணவர் உதவியுடன், கடந்த 4ம் தேதி ஆண் குழந்தை பிரசவித்துள்ளார்.
தகவல் அறிந்த நல்லுார் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் '108' ஆம்புலன்ஸ் உடன் பெல்சியா வீட்டிற்கு சென்று, அவரை மருத்துவ சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது, நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை நலம் அறக்கட்டளை நிர்வாகி சுதாகருடன் சேர்ந்து, பெல்சியாவும் அவரது கணவர் ஜான் கிரிஸ்டோபரும் வர மறுத்துள்ளனர்.
குழந்தையின் தொப்புள் கொடியை மறைத்ததுடன், மருத்துவ சிகிச்சைக்கு அழைக்க வந்த மருத்துவ குழுவினரை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் படி, கொள்ளிடம் போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.