சீர்காழி அருகே கணவர் உதவியுடன் ஆண் குழந்தை பிரசவித்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்த மருத்துவ குழுவினரை மிரட் டிய பிடித்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்,40. இவரது மனைவி பெல்சியா,35. இவர் தான் கருவுற்றது குறித்து சுகாதார செவிலியருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததுடன், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாமலும் இருந்துள்ளார். கடந்த 1ம் தேதி கிராம செவிலியர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்தபோது காரைக்குடியில் மருத்துவ சிகிச்சை பெறுவதாக கூறிய பெல்சியா அங்கு செல்லவில்லை. வீட்டிலேயே கணவர் உதவியுடன் கடந்த 4ம் தேதி ஆண் குழந்தை பிரசவித்துள்ளார்.
தகவல் அறிந்த நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெல்சியா வீட்டிற்கு சென்று மருத்துவ சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது நெம்மேலி கிராமத்தை சேர்ந்த இயற்கை நலம் அறக்கட்டளை நிர்வாகி சுதாகர் என்பவரின் பேச்சைக் கேட்டு, பெல்சியாவும் அவரது கணவர் ஜான் கிறிஸ்டோபரும் குழந்தையின் தொப்புள் கொடியை மறைத்ததுடன், மருத்துவ சிகிச்சைக்கு அழைத்த டாக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.