சேலம்: தமிழகம் முழுதும், நிதி நிறுவன கிளைகளை திறந்து, இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை காட்டி பல கோடி சுருட்டிய மோசடி தம்பதியரின் வீடு, அலுவலகங்களில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சேலம், ரெட்டியூர், தாசில்தார் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 54. இவர், எல்.ஐ.சி., காலனியில், 'ஜஸ்ட் விண் ஐ.டி., டெக்னாலஜி பி.லிட்.,' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.சேலத்தை தலைமையிடமாக கொண்டு, வேலுார், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை உட்பட, எட்டு இடங்களில் இந்நிறுவன கிளை செயல்படுகிறது. இதில், ஒருவர், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு மாதம் கழித்து, 18 ஆயிரம் ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு தரப்படும் எனக்கூறி முதலீடு பெற்றனர்.
ஆசை வார்த்தைகளை நம்பி, சேலம், வேலுார், மதுரை, நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர் தமிழகம் முழுதும், 4,000 பேருக்கு மேல், 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.இதில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகார் மீது அழகாபுரம் போலீசார் ஆக., 19ல், பாலசுப்பிரமணியன், அவரின் மனைவி தனலட்சுமி, 50, மகன் வினோத், 24, மேலாளர் கதிர்வேல், 35, ஆகியோர் மீது, மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த பாலசுப்பிரமணி, அவரின் மனைவி தனலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில், வாழப்பாடி அருகே திருமனுாரில் உள்ள பாலசுப்பிரமணியன் வீட்டில் சோதனை நடத்தி, 1.82 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.சேலம், எல்.ஐ.சி., காலனியில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தி, ஆறு கம்ப்யூட்டர்கள், கேமரா மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.