உளுந்துார்பேட்டை அருகே கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கி கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை தாலுகா பா.கிள்ளனுார் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (எ) ஏழுமலை 29. இவரது மனைவி அம்சலேகா 27. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் நிகில் என்ற மகன் உள்ளார். கணவன், மனைவியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை அம்சலேகா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் துாக்கில் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் அம்சலேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருநாவலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பாபுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி மகாலட்சுமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் பாபு - அம்சலேகா இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத் தட்டிக் கேட்டதால் கடந்த 4ம் தேதி இரவு அம்சலேகாவை பாபு தாக்கினார். மயங்கி விழுந்த அம்சலேகாவை பாபு, அவரது அக்கா ராஜேஸ்வரியின் கணவர் ரவிகார்த்திக் ஆகியோர் சேர்ந்து புடவையால் அம்சலேகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, பாபுவின் கள்ளக்காதலியான ராஜீவ் காந்தியின் மனைவி மகாலட்சுமி ஆகிய 4 பேரும் சேர்ந்து அம்சலேகாவை துாக்கில் இறந்து கிடந்தது போல் ஜோடிப்பு செய்து நாடகமாடியது தெரியவந்தது. திருநாவலுார் போலீசார் பாபு, ராஜீவ்காந்தி, மகாலட்சுமி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவிகார்த்திக்கை தேடி வருகின்றனர்.