வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாண்டியா: கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுலை வரவேற்று அக்கட்சியினர் வைத்துள்ள பேனரில் சாவர்க்கர் படம் இடம்பெற்றது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கேரளாவிலும் சாவர்க்கர் படத்துடன் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ஆர்எஸ்எஸ், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் புகழ்ந்து பேசுவது வழக்கம். அதேநேரத்தில், காங்கிரசார் சாவர்க்கரை அடிக்கடி விமர்சனம் செய்வதும் வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது காங்கிரசும் சாவர்க்கரின் புகைப்படத்தை தங்கள் கட்சியின் நிகழ்வுகளில் பயன்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் தற்போது ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் நடைபயணத்தின்போது அவரது வருகையை ஒட்டி ராகுலை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் அபுல் கலாம் ஆசாத், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் புகைப்படங்களுடன் சாவர்க்கரின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில், சாவர்க்கர் படம் இருந்த இடத்தில் மஹாத்மா காந்தியின் படம் மாற்றப்பட்டது.

இப்போது, ராகுல் கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதாலும் அடுத்தாண்டு இங்குத் தேர்தல் நடைபெறுவதாலும் ராகுலின் நடைபயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பேனரில் சாவர்க்கரின் படம் மீண்டும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாண்டியாவில் உள்ள இந்த பேனரில் ராகுல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோரின் படங்களுடன் சாவர்க்கர் படமும் இடம் பெற்றுள்ளது.
இந்த பேனரை சாந்தி நகர் காங்., எம்.எல்.ஏ நலபாட் அகமது ஹரீஸ் வைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை மறுத்துள்ள நலபாட் அகமது ஹரீஸ், ‛சில அந்நிய சக்திகள் வேண்டுமென்றே எனது பெயரைப் பயன்படுத்தி இப்படி பேனரை வைத்து உள்ளனர். இது தொடர்பாக மாண்டியா போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன்' எனக் கூறினார். மேலும், பேனரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.