கடலுார்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்தாண்டு நவ., 24ம் தேதி, மதியம் 3:30 மணிக்கு பள்ளி முடிந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார். அவரது தாய் விசாரித்ததில், பள்ளி வகுப்பறையில் சிதம்பரம் அடுத்த பூந்தோட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் அசோக்குமார், 57; பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து அசோக்குமாரை கைது செய்து, கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார்.இதில், அசோக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும், 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் அரசு நிதி மூலமாக 2 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.