தலைவாசல்: முடி திருத்தும் தொழிலாளி சாவில் உள்ள மர்மம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் முத்துவேல், 23; முடி திருத்தும் தொழிலாளி. இவர், 2021 செப்., 10ல் மாயமானார்; 12ல் கிராமத்து ஏரியில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர், வீரகனுார் போலீசில் புகார் அளித்தனர்.தொடர்ந்து அவரது உடலை பெற்றுக் கொள்ளாமல் போராட்டம் நடத்தி வந்தனர். விசாரணை நடத்த சேலம் கலெக்டர், எஸ்.பி., உறுதியளித்ததை அடுத்து, 81 நாளுக்கு பின் உடலை அடக்கம் செய்தனர்.
நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆறு பேர், முடி திருத்தும் தொழிலாளி முத்துவேல் இறப்பு குறித்து, கிழக்குராஜாபாளையம் கிராமத்தில் விசாரணை நடத்தினர்.முத்துவேலின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 10 பேரிடம் விசாரித்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'மாவட்ட எஸ்.பி., தலைமையில் தனிப்படை மட்டுமின்றி குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி, சி.பி.சி.ஐ.டி., போலீசார், முதல்கட்ட விசாரணை துவங்கியுள்ளனர்' என்றனர்.