வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா : ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு, நிலங்களை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த, 2004 - 09ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில், 'டி' பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
![]()
|
இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களிடம், வேலை தருவதாக கூறி, அதற்கு லஞ்சமாக நிலங்களை மிக குறைந்த விலைக்கு பெற்றதாக, லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
பணி நியமனம் பெற்றவர்களை தேர்வு செய்ததில், லாலு மகன் தேஜஸ்விக்கு முக்கிய பங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பீஹார் தலைநகர் பாட்னாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுர அடி நிலங்கள், மிக குறைந்த விலைக்கு, லாலு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து இந்த வழக்கில் இன்று லாலு பிரசாத் யாதவ், இவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்ட 15 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.,