'ஹிந்து' மத சர்ச்சைக்கு பின்னணியில் சர்வதேச சதி?

Added : அக் 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
'திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை 'ஹிந்து' அரசனாக்குவது என, தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கின்றனர்' என்று திரைப்பட இயக்குனர்வெற்றிமாறன் கொளுத்திப் போட்ட வன்மம், இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தக் கருத்தை ஆதரித்து திருமாவளவன், ஜோதிமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் கமல் என்று வரிசையாக ஒரு குழுவினர் வெளியே
'ஹிந்து' மத சர்ச்சைக்கு பின்னணியில் சர்வதேச சதி?

'திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை 'ஹிந்து' அரசனாக்குவது என, தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கின்றனர்' என்று திரைப்பட இயக்குனர்வெற்றிமாறன் கொளுத்திப் போட்ட வன்மம், இன்று கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்தக் கருத்தை ஆதரித்து திருமாவளவன், ஜோதிமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் கமல் என்று வரிசையாக ஒரு குழுவினர் வெளியே வருகின்றனர். இவர்கள் எல்லாருக்கும் பிரச்னை, 'ஹிந்து' என்ற சொல் தான். ராஜராஜன் காலத்தில் 'ஹிந்து' என்ற சொல்லே இல்லை; சைவம், வைணவம் போன்ற சமயப் பிரிவுகளே இருந்தன என்று அரைவேக்காட்டு புத்திசாலிகள் கம்பு சுத்துகின்றனர்.


உண்மையில், இவர்கள் இவர்களாகப் பேசவில்லை. பல்வேறு சக்திகள், இவர்களை இப்படிப் பேச வைக்கின்றன.தமிழகம் மட்டுமல்ல, இந்திய மண்ணின் மரபு மற்றும் பண்பாட்டின் மீதான கொடூரத் தாக்குதலின் முன்னணி வீரர்களாக இவர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.தியேட்டரை நோக்கி மக்கள்


கொஞ்சம் நிதானமாக இவர்களுடைய வெறுப்பு அரசியலின் பின்னணியை தோலுரித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.முதல் புள்ளி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மகத்தான வெற்றி. 25 ஆண்டுகளாக காண முடியாத காட்சி ஒன்றை, இன்றைய தியேட்டர்களில் பார்க்க முடிகிறது. தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, நடுவயதினர் என்று குடும்பம், குடும்பமாக தியேட்டரை நோக்கி மக்கள் வருகின்றனர்.


சில ஆண்டுகளாக தியேட்டர் இருக்கை முன்பதிவு, முதல் இரண்டு நாட்களுக்குத் தான் இருக்கும். இந்தப் படத்துக்கு இன்னும் முன்பதிவு தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளாக தியேட்டர்கள் முன்பதிவை நீட்டித்துக் கொண்டே போகின்றன. அத்தனை இருக்கைகளும் நிரம்புகின்றன.


இந்தப் படத்தை மக்கள் கொண்டாடுவதற்கு பல காரணங்கள். ஒன்று, எழுத்தாளர் கல்கி என்ற, 'பிராண்ட்' பெயர். ஆபாசம் அற்ற, கண்ணியமாக, அனைவரும் ரசிக்கத்தக்க படைப்புகளைக் கொடுத்த மகத்தான படைப்பாளி அவர். மணிரத்னத்தைக் கூட மக்கள் நம்பவில்லை. முந்தைய படங்களில் இந்திய இதிகாசங்களை சிறுமைப்படுத்திய அந்த மனிதர், இந்தப் படத்தில் என்ன செய்திருப்பாரோ என்ற அச்சம் இருந்தது. மூலக் கதையை ஒட்டியே படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கை வந்த பின், தியேட்டரை நோக்கி மக்கள் திரள்கின்றனர். படம் வேறோர் உணர்வைத் தருகிறது. இன்றைய தனிக் குடும்பச் சூழலில், சோகமும் வருத்தமும் மேலிட்டிருக்கிறது.குடும்பத்தின் அடையாளம்


ஆனால், சுந்தரச் சோழர் குடும்பம் என்பது கண்ணுக்கு அழகான, வாழ விரும்பக்கூடிய ஒரு கூட்டுக் குடும்பத்தின் அடையாளமாக இருக்கிறது.அதில் வந்தியத்தேவனின் கல்மிஷமற்ற விளையாட்டுக்களை விரும்புகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமையின் சின்னமாக ஆழ்வார்க்கடியானையும், வந்தியத்தேவனையும் பார்க்கின்றனர்.


இத்தனைக்கும், சுந்தரச்சோழருக்கோ, ஆதித்த கரிகாலனுக்கோ, அருண்மொழி வர்மனுக்கோ அன்றும், இன்றும் சைவ அடையாளமாகத் துலங்கும் பட்டை திருநீற்றைப் பூசவில்லை.பழுத்த வைணவரான ஆழ்வார்க்கடியானுக்கோ திருமண் இடாமல், கோபி சந்தனக் கீற்றைப் பூசி, தன்னை தமிழக முற்போக்கு அரசியலின் காவலனாக மணிரத்னம் காட்டிக் கொண்டாலும், மக்கள் இந்தப் பாத்திரங்களை இவர்களுடைய அடையாளங்களோடு தான் ரசிக்கின்றனர்.


இது தான் குடும்பம், இது தான் சமயம், இது தான் நமது பண்பாடு, இது தான் நமது ஆன்மிகம் என்று இந்தத் திரைப்படம், மக்கள் மனத்தில் பதிந்துள்ள பல்வேறு சின்னங்களை மீட்டுருவாக்கம் செய்துள்ளன. நம்பிக்கைகளை வலுப்படுத்தியுள்ளன; நியாயப்படுத்தியுள்ளன.


இது தான் இந்த முற்போக்குக் கும்பலுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது. குடும்பம், தெய்வம், தேசியம், எல்லாம் இவர்களுக்கு எட்டிக்காய். அதைத் துண்டு துண்டாக்குவதன் வாயிலாகவே, இங்கே குழப்ப அரசியல் செய்ய முடியும் என்று கருதுவோரது பிரதிநிதிகளாக 'வெற்றிமாறன்கள்' வளைய வருகின்றனர்.இது, இங்கு மட்டும் இல்லை. உலகம் முழுக்கவே இருக்கிறது. தற்போது, இத்தாலியில் ஜியார்ஜியா மெலோனி என்ற 45 வயது பெண்மணி பிரதமர் ஆகியிருக்கிறார். மேலை நாட்டு இதழ்கள் எல்லாம், அவரைத், 'தீவிர வலதுசாரி' என்றே முத்திரை குத்துகின்றன.மெலோனி குரல்


கொடுங்கோலன் முசோலினியின் மிச்சசொச்சங்களைக் கொண்டே, இவர் தன் கட்சியை கட்டியெழுப்பி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு வேறு. இவர் பேசுவது என்ன தெரியுமா; குடும்பம், கடவுள், தாய்நாடு ஆகியவற்றைக் காப்பேன்' என்பது தான் இவரது கோஷம்.


தன்னை கத்தோலிக்க கிறிஸ்துவராக அடையாளப்படுத்திக் கொள்வதில், மெலோனிக்கு எந்தச் சிக்கலும் இல்லை. குடும்பம் என்ற அமைப்பு வேண்டும், தேசம் என்ற வரையறை வேண்டும் என்று மெலோனி குரல் கொடுக்கிறார்.இதெல்லாம், இத்தாலிக்குப் புதுசு. இத்தனை ஆண்டுகளாக அங்கே பேசப்பட்டவற்றை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, மக்கள் மனத்தின் குரலாக மெலோனி ஒலிக்கிறார்.


இத்தாலிய மக்கள் பெருந்திரளாக மெலோனியின் கட்சியான, 'பிரதர்ஸ் ஆப் இத்தாலி'க்கு ஓட்டளித்துள்ளனர். 2022 பொதுத் தேர்தலில் 26 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். இவர் அமைத்த வலதுசாரிக் கூட்டணி 44 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இதுவரை அங்கே 69 ஆட்சிகள் அமைந்தன. எல்லாருமே ஆண் பிரதமர்கள். இவர் தான் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர்.


இதுவரை இருந்த அனைவருமே இடதுசாரிகள். இவர் தான் ஆழமான தேசப்பற்றுள்ள வலதுசாரி.மக்கள் இவருக்கு ஓட்டுப் போடக் காரணம் குடும்பம், கடவுள், தாய்நாடு என்ற கோஷம்.மக்கள் தங்களை உணர்வு ரீதியாக ஒருங்கிணைக்கும் அம்சங்களாக இவற்றைத் தான் கருதுகின்றனர்.


இத்தாலி மட்டுமல்ல, சுவீடனிலும், ஹங்கேரியிலும் இதே கதை தான். தமிழகத்தில் பொன்னியின் செல்வன் ஓடு ஓடென்று ஓடுவதற்கும் இது தான் காரணம். இங்கேயுள்ள மக்களுடைய அடிமன ஆசையும் குடும்பம், கடவுள், தாய்நாடு என்பது தான். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கேட்க விரும்பிய குரல் அது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது.


வெற்றிமாறன் வகையறாக்களின் உள்நோக்கம் இப்போது புரிகிறதா? இவர்கள் வெடிகுண்டு வைப்பது, இந்த மூன்று அம்சங்களின் மீது தான். அவற்றைக் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை எப்படி இவர்களால் ஏற்கமுடியும்?அதுவும் இவை அனைத்தும், ஹிந்து மன்னனான ராஜராஜன் காலத்திலேயே, அதாவது 10ம் நுாற்றாண்டிலேயே, இங்கே வேரூன்றி இருந்தது என்ற வரலாற்றை, இன்றைய மக்கள் பளிச்சென்று தெரிந்து கொண்டுவிட்டால், இவர்கள் புகுத்தும் புதுப் புரளிகளுக்கு இங்கே இடம் இல்லாமல் போய்விடுமே!சரி, அப்படி என்ன புதுப் புரளிகளைக் கிளப்பிவிடுகின்றனர்?இதற்கு நாம், 'உடையும்இந்தியா' என்ற மகத்தான புத்தகத்தை எழுதிய ராஜிவ் மல்கோத்ராவிடம் தான் போக வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து, இங்கேயுள்ள அன்னிய சக்திகளின் கைக்கூலிகளைத் தோலுரித்தது அந்தப் புத்தகம்.போலி முகங்கள்


அதன் தொடர்ச்சியாக தற்போது, 'ஸ்நேக்ஸ் இன் த கங்கா' அதாவது, 'கங்கையில் பாம்புகள்' என்ற நுாலை வெளியிட்டுள்ளார் ராஜிவ் மல்கோத்ரா.இது, இங்கே இயங்கும் நுட்பமான போலி முகங்களையும், நுண்ணரசியலையும் வெளிப்படுத்துகிறது.தேசிய அளவில், படிப்படியாக மக்கள் ஹிந்து என்ற உணர்வைப் பெற்று ஒருங்கிணைந்து வரும் வேளையில், மேலை சக்திகள் எப்படி நம் கையாலேயே நம் கண்ணைக் குத்தலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டு இருப்பதை, அப்பட்டமாக போட்டு உடைக்கிறது இந்தப் புத்தகம்.


முக்கியமாக இங்கே உள்ள, 'ஜாதி' என்ற அமைப்பை, அமெரிக்காவில் உள்ள, 'இனம்' என்ற அமைப்போடு நேரடியாகப் பொருத்துகிறது.இங்கேயுள்ள, 'தலித்'துகளை அங்கேயுள்ள 'கறுப்பர்களோடு' பொருத்துகிறது; பிராமணர்களை இந்தியாவின் 'வெள்ளைக்காரர்கள்' என்று குறிப்பிடுகிறது.அதாவது, அமெரிக்கக் கோணத்தில், அவர்களுக்குப் புரிந்த மொழியில் இந்தியாவையும், இங்கேயுள்ள சமூக அடுக்குகளையும் குயுக்தியாக புரிய வைக்கின்றன.இனக் கோட்பாட்டு ஆய்வு


அதாவது, அரத பழசான மார்க்சியத்துக்குப் புது முலாம் பூசி, 'இனக் கோட்பாட்டு ஆய்வு' என்ற கிரிட்டிக்கல் ரேஸ் தியரியை முன் வைக்கின்றனர்.அமெரிக்காவில் இனவெறுப்பு, இனப் பாகுபாடு, இன ஒதுக்குதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள். அந்நாடு அவற்றைத் தடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.


நம் நாட்டின் ஜாதியை, அமெரிக்காவின் இனத்தோடு சமமாக வைத்துவிட்டால், நம்மை எட்டி உதைக்கலாம் என்பது தான் இவர்களது திட்டம். இதன் தொடர்ச்சியாக மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில், 'ஜாதியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகுப்புகள்' நடத்தப்படுகின்றன. 'ஈக்குவாலிட்டி லேப்'கள் துவங்கப்படுகின்றன.இதன் அர்த்தம் என்ன? நம் நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து தான், 'ஆர்டர்' வாங்கி அயல்பணி செய்கின்றன.மிகப் பெரிய சதித் திட்டம்


இங்கே பெங்களூருவிலோ, புனேவிலோ, ஹைதராபாதிலோ உள்ள அலுவலகங்களில் ஏதேனும் ஜாதிய ஏற்றத் தாழ்வு தொடர்பான குற்றச்சாட்டு எழுமானால், அது அமெரிக்க முதலாளிகளுக்குப் புரியாது. அதுவே ஜாதி என்பது இனம் என்று சொல்லிக் கொடுத்துவிட்டால், 'அய்யய்யோ உங்கள் அலுவலகத்தில் இனப்பாகுபாடா' என்று அமெரிக்க நிறுவனம் துள்ளிக் குதிக்கும்.உடனே அங்கே இருக்கும் ஈக்குவாலிட்டி லேப் என்ற சமத்துவத்தைச் சோதனை செய்யும் ஆய்வகத்தில் இருந்து சான்றிதழ் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தும்.


அதுவரை, உனக்கு அயல்பணி வழங்கப்படாது என்று, 'செக்' வைக்கும்.மறைமுகமாக நம் வளர்ச்சியைக் குலைக்கவும், நம் இயல்பு வாழ்க்கையைச் சிதைக்கவும் மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கு எல்லாம் மையமாக இருப்பது, ஹார்வர்டு பல்கலை.அங்கே இந்தியாவைச் சேர்ந்த ஆய்வு அறிஞர்கள் உள்ளிட்ட அனைவர் மனதிலும் இந்த 'இனக் கோட்பாட்டு ஆய்வு' முறை புகுத்தப்பட்டு, அவர்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர்.


அவர்கள் இங்கே இருந்துகொண்டே, அமெரிக்கர்களாக நடந்து கொண்டு, நம் அடிவயிற்றிலே அடிப்பார்கள்.இந்த விபரங்கள் அனைத்தையும் தான் ராஜிவ் மல்கோத்ரா தன் 'கங்கையில் பாம்புகள்' நுாலில் விரிவாக எழுதியுள்ளார்.இந்திய நிறம்


இவர்கள் என்ன பெரிதாகச் செய்துவிட முடியும் என்று கேட்கிறீர்களா? கடந்த வாரம் முதல் வெளியாகும் தீபாவளி விளம்பரங்களே இதற்குச் சாட்சி. 'மீடியா ஏஜன்சி'கள் இனிமேல் கரீனா கபூர், தமன்னா உள்ளிட்ட வெள்ளைத் தோல் பெண்களிடம் போகப் போவதில்லை. இந்திய நிறம் என்ற பெயரில் மாநிற வண்ணங்களில் உள்ள பெண்களே, மாடல்களாக காட்டப்படுகின்றனர்.


இதை, 'எத்தினிக்' வண்ணம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும், உள்ளூர இருப்பது 'இனக் கோட்பாட்டு ஆய்வு' தாக்கம் தான்.நம் சிந்தனைகளைக் குலைப்பதன் வாயிலாக, நம் பண்பாட்டைச் சிதைக்கலாம்; நம் ஒற்றுமையைச் சிதைக்கலாம்; நம் பொருளாதாரத்தைச் சிதைக்கலாம்; நம் அமைதியைச் சிதைக்கலாம்; நம் எதிர்காலத்தைச் சிதைக்கலாம். உண்மையில், இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற சதுரங்க ஆட்டத்தில், வெற்றிமாறன்களும், கமலஹாசன்களும் சிப்பாய்கள் தான். மற்றொரு காலனித்துவ அடிமைத்தனத்துக்கு, இவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள் என்பதே உண்மை.

-- அப்பாவித் தமிழன்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
08-அக்-202207:14:04 IST Report Abuse
vadivelu மக்கள் புரிந்து கொண்டு விட்டார்களே என்றும் கவலை படுகிறார்கள்.இதில் இருந்து ஒன்று விளங்குகிறது.மோடி ஆட்சியில் இருந்தால் இந்தியா வல்லரசாகி விடும், அதை தடுக்க மக்களை பிரித்தாக வேண்டும்.அதற்க்கு முதலில் இந்த இந்துத்வா என்பதை கண்டபடி திரித்து மத வெறியர்களை உண்டாக்குகிறார்கள்.
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
08-அக்-202206:31:00 IST Report Abuse
Yogeshananda நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-அக்-202205:31:29 IST Report Abuse
Bhaskaran முற்றிலும் உண்மை வத்திகானிலிருந்து வரும் பணத்துக்கு விலைபோன ஊடகங்கள் முன்னணி யக்குனர்கள் அரசியல் பொறுக்கிகள் எல்லோரும் இந்துமதத்தை ஆட்டிப்பார்க்கலாம்னு நினைக்கறீங்க ஆனால் ஒன்னு சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தது பல நூல்களை ஆராய்ச்சிசெய்த அம்பேத்காரும் வாழ்நாள் முழுதும் பார்ப்பனர்களையும் இந்துமதத்தை எதிர்த்து வந்த பெரியாரும் ஹிந்துமத மகா ஆலவிருட்சத்தின் சல்லிவேரை கூட பிடுங்கமுடியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X