கோவை:கோவை மாநகரில் இயக்கப்படும் 2,000 ஆட்டோக்களில், சுய முன்னேற்ற புத்தகங்கள் கொண்ட 'மினி லைப்ரரி' அமைப்பதற்கான திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.அவர் கூறியதாவது:ஆட்டோ டிரைவர்கள், தங்கள் அறிவை பெருக்கவும், கூடா நட்பை தவிர்க்கவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, ஆட்டோக்களில் பயனுள்ள சுய முன்னேற்ற புத்தகங்கள், செய்தி பத்திரிகைகள் இருக்கும். இதனால், ஆட்டோ பயணத்தை மகிழ்வானதாக மாற்ற முடியும்.ஒவ்வொரு ஆட்டோவுக்கும் மாதம் 5 புத்தகங்கள் வரை வழங்கப்படும். அவை மாதம் தோறும் திரும்ப பெறப்பட்டு, வேறுபுத்தகங்கள் வழங்கப்படும். முதல் கட்டமாக, ஆட்டோக்களில் தொடங்கப்படும் இந்த மினி லைப்ரரி திட்டம், அடுத்த கட்டமாக கால் டாக்சிகளிலும் செயல்படுத்தப்படும்.புத்தகங்கள் அறிவை கூர்மை செய்யும் ஆயுதங்கள் என்ற அடிப்படையில் இந்த முயற்சி தொடங்கப்படுகிறது.
வங்கிகளின் நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆட்டோவில் அமைக்கப்பட்ட மினி லைப்ரரியை கமிஷனர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், 'கலாம் பவுண்டேஷன்' நிர்வாக அறங்காவலர் கிஷோர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.