சென்னை:காமெடி நடிகர் போண்டா மணியிடம், 1 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, அய்யப்பன்தாங்கல், வி.ஜி.என்., நகரைச் சேர்ந்தவர் காமெடி நடிகர் போண்டாமணி. இவர், கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது, திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஷ் பிரீத்திவ், 34, மருத்துவ மனையில் போண்டா மணியுடன் இருந்து பழகி வந்தார். கடந்த 27ல், சிகிச்சை முடிந்து, போண்டா மணி வீட்டிற்கு வந்தார்; ராஜேஷ் பிரீத்திவும் உடன் வந்தார்.அவரை நம்பிய போண்டா மணி மற்றும் அவரது மனைவி மாதவி, ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, ராஜேஷ் பிரீத்திவிடம் மருந்து வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.
மருந்து வாங்கச் சென்ற ராஜேஷ் பிரீத்திவ் மாயமானார். சிறிது நேரத்தில், சென்னை உம்முடி பங்காரு நகைக் கடையிலிருந்து, மாதவியின் மொபைல் போனுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தது.
ஏமாற்றப்பட்டதை அறிந்த மாதவி, போரூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து, ராஜேஷ் பிரீத்திவைகைது செய்தனர். விசாரணையில், அவர், 'தினேஷ், சிவராம குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள்' என, பல பெயர்களில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.