கூடலுார்:முதுமலை சீகூர் யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.
நீலகிரி மாவட்டம், சீகூர் வனப்பகுதியில், யானை வழித்தடங்களில் உள்ள விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, 2011ல் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, 2018ல், 350 சுற்றுலா விடுதி கட்டடங்களுக்கு மாவட்ட நிர்வாகம், 'சீல்' வைத்தது.யானைகள் வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கையாக, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில், மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இக்கமிட்டி, வாழைத்தோட்டம், பொக்காபுரம் பகுதிகளில் 80 விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் அடிப்படையில் நிலங்கள், கட்டடங்களை ஆய்வு செய்தது. ஆய்வு பணி நேற்று நிறைவு பெற்றது.