'சென்னை-தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னை - நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 24ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. எனவே, 21ம் தேதியான வெள்ளி கிழமை அன்றே, சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டு உள்ளனர். தென் மாவட்ட விரைவு ரயில்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயணியர் பட்டியலில் 220 முதல் 320 பேர் உளளனர்.
ஆம்னி பஸ்களில் வழக்கமான நாட்களை காட்டிலும், பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகின்றனs. குறிப்பாக, சென்னை - மதுரை, நாகர்கோவிலுக்கு அதிகபட்சமாக 2,500 - 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தீபாவளியை ஒட்டி, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களையும், முன்பதிவு இல்லாத ரயில்களையும் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், இந்த தீபாவளிக்கு பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இன்னும் சிறப்பு ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. 'அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக போக்குவரத்து துறை கூறுவது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது. எனவே, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும். அதுபோல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விரைவு ரயில்களின் காத்திருப்பு பட்டியலை கணக்கிட்டு, கூடுதல் பெட்டிகள் இணைப்பது, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது என, நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, தென் மாவட்டங்கள், கோவை தடத்தில் விரைவில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.