'தி.மு.க., ஆன்மிகத்திற்குஎதிரானது அல்ல' என, வள்ளலார் முப்பெரும் விழாவை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
![]()
|
அதே விழாவில், வள்ளலாரின் அடையாளமான திருநீறு பட்டை இல்லாமல்திருவுருவச்சிலை, பேனர்கள் வைத்து, ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் தான் என்பதை பகிரங்கமாக பறைசாற்றியுள்ளனர்.
'இது வரலாற்றை திருத்தும் முயற்சி' என, ஆன்மிக அன்பர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.
மக்களை ஆன்மிக வழியில் நெறிப்படுத்தி, நல்வழிப்பாதைக்கு வித்திட்டவர் வள்ளலார்.
அவரின், 200வது பிறந்த நாள்; தர்மசாலை துவக்கி, 156 ஆண்டுகள்; அவர் ஏற்றிய தீபத்திற்கு, 152 ஆண்டுகள் ஆகியவற்றை இணைத்து, வள்ளலார் முப்பெரும் விழாவை, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஓராண்டு நடத்த, அரசு தீர்மானித்தது. அதற்காக தனி குழுவும் அமைத்தது.
இந்நிலையில், வள்ளலார் முப்பெரும் விழாவை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இவ்விழாவில் அவர் பேசும்போது, 'வள்ளலார் முப்பெரும் விழாவை துவக்கி வைப்பது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
'தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல. அதை அரசியலுக்கும், சொந்த சுயநலத்திற்கும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது' என்றார்.
ஆனால், அதே விழாவில் வைக்கப்பட்ட வள்ளலார் சிலை, பேனர்களில், அவரின் அடையாளமான திருநீறு பட்டை இல்லாமல் இருந்தது, தி.மு.க.,வின் ஆன்மிகத்திற்கு எதிரான போக்கை வெளிச்சமிட்டு காட்டியது.
இதற்கு, ஆன்மிக நல விரும்பிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பேராசிரியர் வெற்றிவேல் என்பவர், தன் இணையதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
திராவிட மாயையில் சிக்கி, உன்னுடைய அடையாளங்களை இழக்கும் தமிழா... நம் காலத்திற்கு முன்னதாக வாழ்ந்த மகான் வள்ளலாரின் அடையாளங்களையே இவர்கள் இப்படி அழிக்கின்றனர்.
இன்னும் நுாறு ஆண்டுகளில், வள்ளலார் ஒரு பாதிரியார் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற சொன்ன வள்ளலாருக்கே திருநீற்றை அழிக்க பார்க்கின்றனர் என்றால், சாதாரண மக்கள் எம்மாத்திரம்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:
வள்ளலாரின் அடையாளமே அவரின் திருநீறு பட்டைதான். அதை அழித்து, விழா எடுத்து இரட்டை வேடம் போடுவது ஏன்?
'தி.மு.க., ஆன்மிகத்திற்கும், ஹிந்துக்களுக்கும் எதிரானது அல்ல' என்று வீரவசனம் பேசிவிட்டு, அதே மேடையில் விஷமத்தனமான வேலை பார்த்துள்ளனர். இது வள்ளலார் பக்தர்கள், ஆன்மிகவாதிகளை அவமானப்படுத்திய செயல். இதற்கு முப்பெரும் விழா நடத்தாமலேயே இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
வடலுாரில் உள்ள வள்ளலார் சன்மார்க்க அமைப்பு, அறநிலையத் துறை செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், முதன்முதலில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, அந்த அமைப்பை முறைகேடாக கட்டுப்பாட்டிற்கு, அறநிலையத் துறை கொண்டு வந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. எனவே, வள்ளலார் அமைப்பை விட்டு, செயல் அலுவலர்உடனடியாக வெளியேற வேண்டும். இது, அறநிலையத் துறையின் சட்டத்திற்கு விரோதமான செயல். அரசு, சட்டத்தை மீறக் கூடாது.
அதேபோல, '100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரத்தை, அரசு காட்ட வேண்டும். வேறு கோவில்களின் நிதியில் இருந்து செலவு செய்யக் கூடாது.
![]()
|
வள்ளலார் சுத்த சைவ மார்க்கத்தை சேர்ந்தவர். அவர் நெற்றியில் திருநீறு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. அதை அழித்து வெளியிட்ட இவர்கள், திருவள்ளுவருக்கு செய்தது போல துரோகத்தை வள்ளலாருக்கும் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'வள்ளலாருக்கு 200ம் ஆண்டு பிறந்த நாள் விழா நடத்தும் நேரத்தில், திருநீறு இல்லாத வள்ளலார் படம் சங்கடத்தை ஏற்படுத்தும்' என, வடலுார் சபை சன்மார்க்க அன்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறிய வள்ளலார், சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி, அதன் கொள்கைகளை பரப்பி வந்தார். கடலுார் மாவட்டம், வடலுாரில் அவர் நிறுவிய சத்திய ஞானசபையில், அவரால் துவக்கப்பட்ட தரும சாலையில் அன்னதானம் தொடர்ந்து வருகிறது.வள்ளலாருக்கு அடையாளமாக, நெற்றி நிறைய திருநீறு அணிந்த படம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வடலுார் சபையிலும் திருநீறு பிரசாதமாக தருவது வழக்கமாக உள்ளது. வடலுார் சத்திய ஞான சபையின் சன்மார்க்க அன்பர்கள் கூறியதாவது: வள்ளலார், ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். தற்போது எல்லாரும் பயன்படுத்தும் வள்ளலார் படம் கற்பனையானது. அவரை யாரும் நேரில் கண்டதில்லை. அவர் இப்படி இருப்பார் என, கற்பனை அடிப்படையில் வரையப்பட்டது. திருவள்ளுவரைப் போன்று, வள்ளலாருக்கும் உண்மையான படம் இல்லை. ஆரம்பத்தில் வள்ளலார் படத்தில் விபூதியுடன் வரையப்பட்டது. 2007ல் மத்திய அரசு, விபூதி அணிந்த வள்ளலார் தபால் தலை வெளியிட்டது. 'வள்ளலார் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். விபூதி பூசிய தபால் தலை வெளியிட்டது தவறு' என வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி, 'வள்ளலார் எவ்வளவோ நல்ல விஷயங்களை கூறியுள்ள போது, இந்த சர்ச்சை தேவையற்றது' என கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். எனவே தமிழக அரசு, வள்ளலாருக்கு விழா எடுத்து வரும் நேரத்தில், இந்த சர்ச்சை தேவையற்றது. இது, உலகம் முழுதும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் மனதை புண்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்- -