சென்னை: அதிமுக கோஷ்டி பூசலை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பா.ஜ., குளிர்காய பார்க்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திமுக 15 வது பொதுக்குழுவில், 2வது முறையாக திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து தேர்தல்களிலும் வென்று, வெற்றிக் கோட்டையாக திமுகவை மாற்றியிருக்கிறோம். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுக கட்சிப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
திமுக உட்கட்சி தேர்தலில் போட்டி என்பது கட்சிக்காக உழைப்பதற்கான போட்டியாகும். திமுகவில் பொறுப்புகளுக்கு வந்திருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுக கல்கோட்டை ஆகும். கோட்டை மீது, கல்வீசினால் கோட்டை சேதமடையாது, மேலும் வலுப்பெறும். பல்வேறு பொறுப்புக்கு தகுதி உடைய பல லட்சம் பேர்கள் உள்ளனர்.
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்:

அனைவரும் அதிக ஆற்றல்மிக்கவர். நாள்தோறும் எழும்பும் போது, புது பிரச்னை உருவாகி விடக்கூடாது என்று கண்விழிக்கிறேன். ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். எனவே, திமுக.,வினர் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். திமுக தோன்றிய காலத்தில் இருந்த அதே சுறுசுறுப்பில் இன்னும் இருக்கிறோம். நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் வென்றிருக்கிறோம்.
திமுக உட்கட்சி ஜனநாயகத்துடன் இயங்கி வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்தும் திமுக நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். திமுக உட்கட்சி தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.

கண்காணிப்பு:
திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தொடர்ச்சியாக பல கூட்டங்களை திமுக நிர்வாகிகள் நடத்த வேண்டும். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பதே மிக முக்கியமான கடமையாகும். தமிழகத்தில் இனி நிரந்தரமாக ஆளப்போகிறது. திராவிட மாடல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது திமுக செல்வாக்கு அதிகரித்துள்ளது.

வெட்டியும் ஒட்டியும்:
திமுகவில் வாய்ப்பை பெற முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். உட்கட்சி தேர்தலில் மோதல் வெடிக்கும் என எழுதலாம் என்று நினைத்த பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது. திமுகவினர் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்புவார்கள். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்றி தேசிய அரசியலில் முக்கிய சக்தியாக திமுக உருவெடுக்க வேண்டும்.
பா.ஜ., மீது சாடல்
பார்லி., தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., எதையும் செய்ய தயாராக உள்ளது. அதிமுக கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர்காய பார்க்கும் அக்கட்சியானது மதம், ஆன்மிகத்தை தூண்டிவிட்டு பதவியை பிடிக்க பார்க்கிறது.

அதிமுக 4 பிரிவுகள்:
திமுகவை எதிர்ப்பதை தவிர அதிமுகவுக்கு வேறு எந்த கொள்கையும் இல்லை. அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்தும், சரிந்தும், சிதைந்தும் கிடக்கிறது. எதிர்கட்சிகளுக்கு சொல்லிக்கொள்ள எந்த பெருமையும் இல்லாததால் நம்மை அவமதிக்க பார்ப்பார்கள். திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சிக்கும் அவர்களுக்கும் பெருமை தரக்கூடியவையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.