சென்னை:சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின், மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பேசிய ஸ்டாலின், ''நாள்தோறும் காலையில்,கட்சியினரால் எந்த புது பிரச்னையும் உருவாகி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன். அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், சில நேரங்களில் என்னை துாங்க விடாமல் ஆக்கி விடுகின்றன. பேச்சில் அனைவரும் அதிக கவனமாக இருக்க வேண்டும்,'' என, கட்சியினருக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்தார்.
தி.மு.க., தலைவர் தேர்தலுக்கான பொதுக்குழு கூட்டம், சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் ஆணையராக, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை ஏற்று நடத்தினார்.
கட்சித் தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை, 2,068 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர். 'வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால், ஸ்டாலின் இரண்டாவது முறையாக, ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்' என, ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த ஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி எழுந்து மேடைக்கு சென்றார்; ஆற்காடு வீராசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
பின், மேடையில் இருந்த ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொதுச் செயலராக அமைச்சர் துரைமுருகன்; பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி,வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் தேர்வாகினர்.
கனிமொழிக்கு பதவி
நியமன பதவிகளுக்கு, முதன்மை செயலராக கே.என்.நேரு, துணை பொதுச் செயலர்களாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆகியோர் நியமிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.'டில்லியில் ஒலிக்கக் கூடிய கர்ஜனை ஒலி கனிமொழி, அவர் புதிதாக துணை பொதுச் செயலராக நியமிக்கப்படுகிறார்' என, ஸ்டாலின் அறிவித்ததும், கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
பின், தேர்வான அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆளுயுர மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கும், சுற்றுச்சூழல் அணி, அயலக அணிகளை உருவாக்கியதற்கும், கட்சியின் சட்டத்திருத்த விதிகளுக்கும், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உட்கட்சி தேர்தலில் போட்டி இருந்தது. அது, பதவிக்காக அல்ல; உழைப்பதற்காக. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். விட்டுக் கொடுப்பதும், ஜனநாயக நடைமுறைகளில் ஒன்று.
தி.மு.க., பழுத்த மரம்
தி.மு.க., பழுத்த மரமாக இருப்பதால் தானே கல்லெறிகின்றனர். தி.மு.க., பழுத்த மரம் மட்டுமல்ல; கற்கோட்டை. வீசப்படும் கற்களை வைத்தே கோட்டை கட்டும் ஆற்றல் பெற்றவர்கள் நாம். கோட்டை மீது கல் வீசினால், கோட்டை பலம் பெறுமே தவிர பலவீனம் அடையாது.
புதிய நிர்வாகிகள், பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அவர்களின் ஆலோசனையையும் பெற வேண்டும். சிலர் மற்ற நிர்வாகிகளோடு, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என நான் கேள்விப்படுகிறேன்.
இதைவிட கட்சிக்கு செய்யும் துரோகம், வேறு எதுவும் இருக்க முடியாது. கிளை முதல் மாவட்டம் வரை பொறுப்புக்கு வந்துள்ள கட்சியினரின் செயல்பாடுகளும், தலைமை சார்பில் கண்காணிக்கப்படும்.தேரை வலிமையான தோள்களுடன் சிலர் இழுத்துச் செல்வர். சிலர் சும்மா கையை வைத்திருப்பர். அப்படி சும்மா கையை வைத்தபடி செல்லக்கூடாது, அனைவரும் சேர்ந்து இழுத்து செல்ல வேண்டும்.
தமிழகத்தை தி.மு.க., நிரந்தரமாக ஆளப்போகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன் இருந்ததை விட கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களிடம் பெற்றுள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற பயமும் உண்டாகியுள்ளது. மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வர்.
பன்முனை தாக்குதலுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். ஒரு பக்கம் தி.மு.க., தலைவர், இன்னொரு பக்கம் முதல்வர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல இருக்கிறது என் நிலைமை.
என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கட்சி நிர்வாகிகளும், மூத்தவர்களும், அமைச்சர்களும் நடந்து கொண்டால், நான் என்ன சொல்வது; யாரிடம் சொல்வது.
துாக்கம் போச்சு
நாள் தோறும் காலையில், கட்சியினர் எந்த புதுப்பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன். இது, சில நேரங்களில் என்னை துாங்க விடாமலும் ஆக்கிவிடுகிறது. கட்சியினரின் செயல்பாடுகள் கட்சிக்கும், உங்களுக்கும் பெருமை தேடி தருவதாக அமைய வேண்டும்; சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது.
பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையால், கட்சி பழிகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளானது. நம் வீட்டின் படுக்கை, பாத்ரூம் தவிர அனைத்தும் பொது இடமாகி விட்டது; எல்லாருக்கும் மூன்றாவது கண்ணாக மொபைல் போன் முளைத்து விட்டது.
ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் சொற்கள் முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். பொதுமேடைகள் மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் பேசும் போதும் மிக மிக எச்சரிக்கையுடன் பேசுங்கள்.
நீங்கள் சொன்னதை வெட்டியும், ஒட்டியும் பரப்பி விடுவர். பதில் சொல்ல நேரம் சரியாகி விடும். பின், மக்கள் பணியை எப்படி பார்க்க முடியும். கவனத்தை திசை திருப்புவது தான் எதிரிகளின் நோக்கம்.
திராவிட மாடல்
திராவிட மாடல் என்ற சொல்லே, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவிட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மதத்தை, ஆன்மிக உணர்வுகளை துாண்டி விட்டு அரசியல் நடத்த பா.ஜ., விரும்புகிறது. அரசியலையும், ஆன்மிகத்தை தமிழக மக்கள் இணைக்க மாட்டார்கள் என்பதால், பா.ஜ.,வுக்கு மூச்சு திணறி வருகிறது. அ.தி.மு.க.,வோ நான்கு பிரிவுகளாக சரிந்து கிடக்கிறது.
சாதனைகளை எதையும் சொல்ல முடியாத பா.ஜ.,வினரும்; சரிந்தும், சிதைந்தும் கிடக்கும் அ.தி.மு.க.,வினரும், தேர்தல் களத்தில் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுவர். அடுத்த இரண்டு மாதத்திற்குள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நிர்வாகிகள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தேசிய அரசியலுக்கு தலைமை ஏற்க அழைப்பு
சென்னையில் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசியதாவது:
* முன்னாள் அமைச்சர் பொன்.முத்துரமாலிங்கம்: திராவிட இயக்கத்திற்கும், வேத சித்தாந்தத்திற்கும் இடையே போர்களம் உருவாகி உள்ளது. ராஜராஜசோழன் தரைமார்க்கமாக படையெடுத்து வென்றான்; ராஜேந்திர சோழன் கடல்தாண்டி படையெடுத்து வென்றான். அவர்கள் பெற்ற வெற்றியை போல, தேசிய அரசியலில் முதல்வர் ஸ்டாலினுக்கும் கடல் கடந்த வெற்றி கிடைக்கும்.
* முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி: பிரதமர் பதவி கருணாநிதியை தேடிவந்த போது, 'தன் உயரும் தனக்கு தெரியும்' என்றார். அதேபோல, ஸ்டாலினும் சொல்கிறார்; அவரின் உயரம் அவருக்கு தெரியவில்லை. இந்தியாவுக்கு அவர் தலைமை ஏற்று வழிநடத்த முன் வர வேண்டும்.
* அமைச்சர் எ.வ.வேலு: திராவிட மாடல் ஆட்சி வாயிலாக, நாடே தமிழகத்தை திரும்பி பார்க்கிறது.
* தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: மகளிர் அணி செயலர் கனிமொழி என் அத்தை; என் தந்தையின் தங்கை; கருணாநிதியின் மகள். அவரை துணைப் பொதுச் செயலராக நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மகளிர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட, 19 அணிகளுக்கும் ஒரு இலக்கு நிர்ணயித்து, கட்சி பணியாற்ற உத்தரவிடுங்கள். லோக்சபா தேர்தல் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்.
* தயாநிதி எம்.பி., : முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் தலைவராக இருக்க வேண்டும்.
* அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு: தமிழக முதல்வராக, 20 ஆண்டுகள் ஸ்டாலின் பதவி வகிப்பார். வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை நிரூபிக்கத் தயார்.
* அமைச்சர் கே.என்.நேரு: வாழ்நாள் முழுதும் ஸ்டாடலின் தலைரவாக இருக்க வேண்டும்; இந்தியாவிற்கும் அவர் தலைவராக விளங்க வேண்டும்.இவ்வாறு பலரும் பேசினார்.
அவர்களுக்கு பதில் தரும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளை கைப்பற்றி, தேசிய அரசியலில் முக்கிய சக்தியாக, தி.மு.க., உருவெடுக்க வேண்டும்,'' என்றார்.
துணை பொதுச் செயலர் கனிமொழி பேசியதாவது:கருணாநிதி இறந்த பின், தி.மு.க.,வில் வெற்றிடம் உருவாகி இருப்பதாக பலர் விமர்சித்தனர். பரம்பரை பகைவர்கள், இதை பயன்படுத்தி சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தனர். அதைத் தகர்த்து, வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல், ஆழிப்பேரலையாக ஸ்டாலின் பொறுப்பேற்று, அதை சாதித்துக் காட்டினார். அப்பா இல்லாத இடத்தில், உங்களை வைத்து பார்க்கிறேன். அண்ணா, நீங்கள் எடுத்து வைக்கும் அடிகள்; தேர்ந்தெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் அணிவகுத்து பின்னால் நிற்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.