உங்களைச் சூழ்ந்திருக்கும் கர்மக் குவியலை கையாளுங்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உங்களைச் சூழ்ந்திருக்கும் கர்மக் குவியலை கையாளுங்கள்!

Added : அக் 10, 2022 | |
நம்மைச் சுற்றிலும் மலையளவு கர்மாவை நாம் எப்படிக் குவித்துக்கொள்கிறோம் என்பதையும், மற்றும் இதை அழிப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.சத்குரு: சங்கரன்பிள்ளை உள்ளூர்ப் பேருந்து ஒன்றில் ஏறினார். சட்டென்று, தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டு, தன்னையே குறுக்கிக்கொண்டார். குழப்பமடைந்த சக பிரயாணி அவரிடம், “ஐயா, உங்களுக்கு என்னவாயிற்று?”
உங்களைச் சூழ்ந்திருக்கும் கர்மக் குவியலை கையாளுங்கள்!

நம்மைச் சுற்றிலும் மலையளவு கர்மாவை நாம் எப்படிக் குவித்துக்கொள்கிறோம் என்பதையும், மற்றும் இதை அழிப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

சத்குரு: சங்கரன்பிள்ளை உள்ளூர்ப் பேருந்து ஒன்றில் ஏறினார். சட்டென்று, தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டு, தன்னையே குறுக்கிக்கொண்டார். குழப்பமடைந்த சக பிரயாணி அவரிடம், “ஐயா, உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார். தனக்கு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்திய சங்கரன்பிள்ளை பிறகு கூறினார்,” அங்கே இருக்கும் அந்த முதிய பெண்மணியை நான் பார்த்துவிட்டால், நான் எனது இருக்கையை அந்தப் பெண்ணுக்கு அளிக்க வேண்டியிருக்கும். அவரைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகவே குனிந்துகொள்கிறேன்”.


சங்கரன்பிள்ளை என்ன செய்திருக்கலாம் என்றால், எழுந்து அவரது இருக்கையை வழங்கியிருக்கலாம் அல்லது தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். ஆனால் ஒன்றைத் தவிர்ப்பது மிகப் பெரிய கர்மா என்பதை பெரும்பாலான மக்களும் உணராமலேயே, பல விதங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்கின்றனர். ஈடுபாட்டுடன் இருப்பதைத் தவிர்க்கும் கணமே, கர்மா மேலும் அதிகரிக்கிறது. “நான் என் இருக்கையை விட்டுத்தர வேண்டுமா அல்லது வேண்டாமா” - என்ற மனக்கணக்கு அதைவிடப் பெரிய கர்மாவாகிறது.


பிணைப்பு-தவிர்த்தல் என்னும் இந்தப் பொறியிலிருந்து ஒருவர் எப்படித் தப்புவது? இந்தக் கேள்வி பலரைக் குழப்புகிறது. குழப்பமான ஒரு நிலையில், உங்களைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொன்றும் உங்களுடன் ஒட்டிக்கொள்கின்றது! பசையினால் போர்த்தப்பட்ட உங்களுடன் ஒவ்வொரு தூசியின் துகளும் ஒட்டிக்கொள்வதைப் போன்றது இது. கர்மாவைச் சேகரிப்பது என்பது நல்லவற்றைச் செய்வதனாலோ அல்லது தீய செயல்களினாலோ விளைவதல்ல. குழப்பமான நோக்கங்கள் மற்றும் எல்லைக்குட்பட்ட ஆசைகளுடன் உங்களுக்குள்ளேயே நீங்கள் கர்மாவைக் கட்டமைத்துக்கொள்கிறீர்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, மூச்சு முட்டும்படியான மலையளவு கர்மாவைச் சேர்த்துவிடுகிறீர்கள்.


பெருகிவிட்ட இந்த மலையளவு கர்மாவை எப்படி ஒருவரால் தரைமட்டமாக்க முடியும்? இதற்கான எளிமையான பதில்: நீங்கள் அதை இடித்துத் தள்ள முயற்சிக்கவேண்டாம். பசையை மட்டும் நீங்கள் நீக்கினால் போதுமானது. ஒரு கணத்தில் ஒட்டுமொத்த மலையும் பிளந்து விழுந்துவிடும். இந்தப் பசையானது எப்படி நீக்கப்படுகிறது? ஒன்றைத் தவிர்ப்பதன் மூலம் அல்ல, ஆனால் விழிப்புணர்வாக ஈடுபடுவதன் மூலம் இது நிகழ்கிறது. விழிப்புணர்வான ஈடுபாடு கொள்வதனால், மீண்டும் ஒட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.


மனித ஆசையானது எல்லைக்குட்பட்டதாகவோ அல்லது எல்லையற்றதாகவோ இருக்கமுடியும். நீங்கள் எல்லையற்றதற்கான ஆசையைத் தேர்ந்தெடுத்தால், அதுதான் கர்மாவின் முடிவு. வேறுவிதமாகச் சொல்வதென்றால், உங்கள் விருப்பு வெறுப்புகளையும், “எனது” மற்றும் “எனதல்ல” ஆகிய குறுகலான கருத்துக்களையும் கடந்து நீங்கள் வளர்ந்தால், அதுவே கர்மாவின் முடிவு.

இணைத்துக்கொள்வதை உங்களது ஆசையாகக் கொள்ளுங்கள், எல்லாவற்றையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். உலகத்திற்கு ஒரு தாயாகிவிடுங்கள். அப்போது ஒட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு நிரந்தரமாக மறைந்துபோகிறது.


ஆன்மீகப் பாதையின் உச்சபட்ச நோக்கம், பாரபட்சமில்லாத ஈடுபாடு மற்றும் தடுமாற்றமில்லாத மனக்குவிப்பு. நீங்கள் எதனுடன் ஈடுபாடு கொள்கிறீர்கள் அல்லது எதன் மீது முனைப்பாக இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. அது கடவுளாக, ஒரு பாறையாக, ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக இருக்கலாம். மனக்குவிப்புக்கு ஆளாகும் பொருள் முக்கியமில்லாதது. யோகப் பாரம்பரியத்தில் ஆகாஷி முத்திரை பயிற்சியானது ஒன்றுமற்றதின் மீது மனம்குவிக்க உதவுகிறது; அது வெற்றிடத்தின் மீதான தடுமாற்றமில்லாத மனக்குவிப்பு. முக்தி என்பது நீங்கள் மனம்குவிக்கும் பொருளைப் பொறுத்தது அல்ல, முனைப்பு மட்டுமே இங்கே முதன்மையானது.


எந்தக் குறிப்பிட்ட நோக்கமோ அல்லது கொள்கையோ இல்லாமல் ஒரு ஆழமான ஈடுபாடு கொள்ளும் உணர்வைப் பழக்கப்படுத்துவதற்கே ஒட்டுமொத்த யோகமுறையும் இருக்கிறது. காலப்போக்கில், இது விலகி நிற்பது என்ற அர்த்தத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது: ஈடுபாடு கொள்வதை பிணைப்புடனும் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை ஆர்வமின்மையுடனும் மக்கள் குழப்பிக்கொண்டனர். அவர்கள் மறந்துவிட்டதும், மற்றும் சங்கரன்பிள்ளை அந்தப் பேருந்தில் உணர்ந்ததும் என்னவென்றால், யாரோ ஒருவரை அலட்சியம் செய்வதற்கும்கூட மிக அதிகமான ஈடுபாடு தேவைப்படுகிறது.


வாழ்வென்னும் செயல்முறையே நோக்கமில்லாதது என்பதால், வாழ்வின் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபாடு கொள்வதில் மட்டும்தான் வாழ்வின் சாரத்தை ருசிக்க முடியும். செயல்பாடுதான் நோக்கம்; இலக்கு ஒரு விளைவு மட்டுமே. மேலும் எல்லாவற்றையும் எளிமைப்படுத்துவதற்காகவே, பல பழமையான பாரம்பரியங்களும் "பக்தி" குறித்து எடுத்துரைத்தன.


பக்தி குறித்து உணர்வுபூர்வமாக எதுவுமில்லை. உண்மையான பக்தி என்னும் நெருப்பு உங்களுக்குள் எரிந்தால், அது எல்லாவற்றையும் எரித்துவிடும். இலக்கு என்ன என்பதைக் குறித்து வருத்தம் கொள்ளாமல் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதில் உங்களுக்கு அது உத்தரவாதம் அளிக்கும். உங்களை விடுதலை செய்வது அனைத்தையும் இணைத்துக் கொள்ளும் பயணம்தானே தவிர, இலக்கு அல்ல. விலக்கி வைப்பதில், நீங்கள் கூண்டில் அடைபடுகிறீர்கள். இணைத்துக்கொள்வதில், நீங்கள் விடுதலை அடைகிறீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X