சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அனுமதி கிடைக்காததால், மின் வாரியம், பூந்தமல்லி பாரிவாக்கம் - கிண்டி இடையில், 400 கிலோ வோல்ட் திறனில் தரைக்கு அடியில் அமைக்கும், 'கேபிள்' மின் வழித்தட பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் தான் மின் தேவை அதிகம் உள்ளது. அதன்படி தினமும் சராசரியாக, 2,800 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கோடை காலத்தில் 3,500 மெகா வாட்டை தாண்டுகிறது. ஆனால், ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் மின் தேவையே இது தான்.

சென்னையின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப மின் வினியோகம் செய்ய, பல பகுதிகளில் இருந்து மின்சாரம் எடுத்து வரப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடசென்னை, வல்லுார் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், அம்மாவட்டத்தில் உள்ள அலமாதி 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் 400 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு, மின் கோபுர வழித்தடத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.
சுங்குவார்சத்திரம் - அலமாதி மின் வழித்தடத்தில், பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு பாரிவாக்கம் என்ற இடத்தில் இருந்து, கிண்டி 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையத்திற்கு, அதே திறனில் கேபிள் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இதில், 16.50 கி.மீ., கேபிள் வழித்தடம் அமைக்கும் பணி, கடந்த 2020 மே மாதம் துவங்கியது. திட்ட செலவு, 600 கோடி ரூபாய். கேபிள் அமைக்கும் பணியை, தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இதுவரை கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி என, 3 கி.மீ., மட்டுமே கேபிள் வழித்தடம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரிவாக்கம் - பூந்தமல்லி - போரூர் - கத்திப்பாரா - கிண்டி இடையில் கேபிள் மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ஒப்பந்தம் வழங்கியதில் இருந்து, 36 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதன்படி, மேற்கண்ட வழித்தடம், 2023 மே மாதம் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.
ஆனால், பூந்தமல்லி பகுதிகளில் தரைக்கு அடியில் கேபிள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும்; போரூர் - கத்திப்பாரா சாலையில் கேபிள் அமைக்க, மெட்ரோ ரயில் நிறுவனமும் அனுமதி அளிக்க தாமதம் ஆகிறது. இதனால், இதுவரை 3 கி.மீ., மட்டுமே பணி முடிந்துள்ளது.
எனவே, விரைந்து அனுமதி அளிக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாரிவாக்கம் - கிண்டி வழித்தடம் வாயிலாக, சென்னையில் கூடுதலாக, 1,000 மெகா வாட் மின்சாரத்தை கையாள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.