வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலம் : ''வரும், 2026ல் தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைக்கும். அதற்கான வியூகங்களை வரும், 2024ம் ஆண்டு முதல் தீவிரமாக அமைக்கப்படும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொல்லியங்குணம், நெல்லிதோப்பில் பா.ம.க., ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின், பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: தமிழகத்தில் அதிக குடிசைகள் உள்ள மாவட்டம் விழுப்புரம். கல்வி, வேலைவாய்ப்பில் கடைசி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் விற்பனையில் மட்டும் முதலிடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
தற்போது, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., ஹிந்தியை திணிப்பதற்கு முயற்சித்தால், அதை பா.ம.க., கடுமையாக எதிர்க்கும். விருப்பப்பட்டு ஹிந்தி படித்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், யார் மீதும் திணிக்கக் கூடாது என்பதில், பா.ம.க உறுதியாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வடிகால் பணிகள், 50 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். வரும், 2026ல் தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைக்கும். அதற்கான வியூகங்கள், 2024 முதல் தீவிரமாக அமைக்கப்படும். இவ்வாறு அன்புமணி கூறினார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:அரியலுார் மாவட்டத்தில், சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசன கட்டமைப்புகள் வியக்க வைப்பவை. ஆறுகளில் இருந்து பெரிய ஏரிகளுக்கும், அங்கிருந்து சிறிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்ல நீர் பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.இந்த பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல், அனைத்து ஏரிகளையும் துார் வாருதல், கொள்ளிடம், மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்க வேண்டும். இதை வலியுறுதத்தி, வரும் 29, 30 தேதிகளில், அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.