சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தாளாளருக்கு, 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலை, அரசு சார்நிலை கருவூலத்திற்கு பின்புறம் சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பள்ளி தாளாளராக பணியாற்றியவர் குருதத், 64. கடந்த 2019 நவ.,24ல், சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
இதில், கலந்து கொண்ட, ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயது சிறுமியிடம் தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக கூறி, அப்போது பள்ளி தாளாராக பணியாற்றிய குருதத், சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஒரு அறையில் கதவை மூடி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சசிகலா, பள்ளி தாளாளர் குருதத்தை உடனடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
இவ்வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நீதிபதி பி.சுதா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட குருதத் சிறுமியை அறைக்குள் வைத்து பூட்டியதற்காக ஒரு வருடம் மற்றும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏழாண்டு ஆண்டு சிறை மற்றும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.