ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே முதல்வர்ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்த 'சிப்காட்' திட்ட அலுவலகத்தில் ஒரே அறையில் இரண்டு 'வெஸ்டர்ன் டாய்லெட்' அருகருகே அமைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே பிள்ளைப்பாக்கத்தில் 2008ம் ஆண்டு சிப்காட் தொழிற்பூங்காதுவக்கப்பட்டது.
இங்கு 105 தொழிற் சாலைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 84 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன; 15 தொழிற்சாலைகளின் கட்டுமான பணிநடக்கிறது. இந்நிலையில் சிப்காட் திட்ட அலுவலகம் 1.80 கோடி ரூபாய் மதிப்பில் 4784 சதுர அடியில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தின் உள்ளே ஒரே கழிப்பறையில் அருகருகே இரண்டு 'வெஸ்டர்ன் டாய்லெட்' அமைக்கப்பட்டிருப்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எப்படி ஒரே அறையில் இரண்டு பேர் டாய்லெட் செல்வது என இந்த படம் பகிரப்பட்டு இது தான் திராவிட மாடல் ஆட்சியோ என கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவலை அறிய சிப்காட் திட்ட அலுவலர் கவிதாவை தொடர்பு கொண்ட போது அவர் அலைபேசியை எடுக்கவில்லை.